மகளிர் ஆசிய கோப்பை டி20 தொடரில் இலங்கையை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி. இதன் மூலம் தொடரை இந்திய அணி வெற்றிகரமாக தொடங்கியுள்ளது.
வங்கதேசத்தில் நடப்பு மகளிர் ஆசிய கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் இந்திய அணி ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையில் பங்கேற்று விளையாடுகிறது. இந்தத் தொடர் டி20 ஃபார்மெட்டில் நடைபெறுகிறது. மொத்தம் 7 அணிகள் பங்கேற்று விளையாடுகின்றன. ரவுண்ட் ராபின் முறையில் இந்தத் தொடரின் முதல் சுற்று நடைபெறுகிறது.
இன்று இந்தியா மற்றும் இலங்கை அணிகள் தங்களது முதல் போட்டியில் பலப்பரீட்சை மேற்கொண்டன. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீசியது. இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 150 ரன்கள் எடுத்தது. ரோட்ரிகஸ், 53 பந்துகளில் 76 ரன்கள் எடுத்தார். கேப்டன் ஹர்மன்ப்ரீத் 33 ரன்கள் குவித்திருந்தார்.
151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இலங்கை அணி விரட்டியது. இருப்பினும், அந்த அணி 18.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த 109 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டத்தை இழந்தது. இதன் மூலம் இந்தியா வெற்றி பெற்றது. வரும் 3-ம் தேதி அன்று மலேசிய அணிக்கு எதிராக இந்தியா விளையாட உள்ளது.