சட்டப்பேரவை நூற்றாண்டு விழாவில் பங்கேற்க குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று மதியம் சென்னை வந்தார்.
சென்னை மாகாணமாக இருந்தபோது மக்களால் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவை, 1921-ம் ஆண்டு ஜனவரி 12-ம் தேதி உருவாக்கப்பட்டது. அதன்படி, சென்னை மாகாண சட்டப்பேரவை உருவாக்கப்பட்டு, 100 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், பேரவை நூற்றாண்டு விழா இன்று (ஆக. 02) கொண்டாடப்படுகிறது. இதில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கிறார்.
மேலும், தமிழகத்தின் முதல்வராக 5 முறை பணியாற்றியவரும், 13 முறை சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தவருமான கருணாநிதியின் உருவப் படத்தையும் சட்டப்பேரவையில் குடியரசுத் தலைவர் திறந்துவைக்க உள்ளார்.
இந்நிலையில், இவ்விழாவில் பங்கேற்க இன்று மதியம் டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். அவரை முதல்வர் மு.க.ஸ்டாலின் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். மேலும், சில புத்தகங்களையும் அன்பளிப்பாக வழங்கினார். உடன், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு, மூத்த அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, பொன்முடி, ஐ.பெரியசாமி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், டிஜிபி சைலேந்திரபாபு, மக்களவை திமுக உறுப்பினர் கனிமொழி உள்ளிட்டோரும் வரவேற்றனர். பாஜக சார்பாக அக்கட்சியின் தலைவர் அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ ஆகியோரும் வரவேற்றனர்.
பின்னர், கார் மூலம் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆளுநர் மாளிகை புறப்பட்டார். அவரது வருகையையொட்டி, சாலையின் இரு புறங்களிலும் வாகனப் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆளுநர் மாளிகையில் மதிய உணவருந்தும் குடியரசுத் தலைவர், மாலை 4.40 மணிக்கு சட்டப்பேரவை நிகழ்வில் கலந்துகொள்ள அங்கிருந்து புறப்படுகிறார்.