மக்களின் நலனுக்காக கொண்டுவரப்படும் திட்டங்கள் அரசியலாக்கப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி வேதனை தெரிவித்துள்ளார்.

தலைநகர் டெல்லியில் பிரகதி மைதான ஒருங்கிணைந்த போக்குவரத்து வழித்தட திட்டம் 920 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. ஐ.டி.ஓ பகுதியில் போக்குவரத்து நெரிசலை எளிதாக்குவதுடன், புதிதாக மேம்படுத்தப்பட்ட பிரகதி மைதானத்தை இணைக்கும் வகையில் பிரதான சுரங்கப்பாதை மற்றும் 5 சுரங்கப் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதில் ஒன்று புள்ளி 3 கிலோ மீட்டர் நீளத்திலான பிரதான சுரங்கப்பாதை புராணா கிலா சாலையில் உள்ள தேசிய விளையாட்டு வளாகத்திற்கு அருகில் தொடங்கி, மறுசீரமைக்கப்பட்ட பிரகதி மைதானத்தின் கீழ் சென்று பிரகதி மின் நிலையத்திற்கு அருகே உள்ள சுற்றுச்சாலையில் முடிவடைகிறது. இந்த பிரதான சுரங்கப் பாதை மற்றும் 5 சுரங்கப் பாதைகளை பிரதமர் மோடி ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். அதன்பின் சுரங்கபாதைகள் வழியாக காரில் சென்று பார்வையிட்டார்.

சுரங்கப்பாதையில் அலங்கரிக்கப்பட்டுள்ள இந்திய கலாச்சாரம், பறவைகள் மற்றும் ஆறு பருவங்களை சித்தரிக்கும் சுவரோவியங்களை பிரதமர் மோடி நடந்து சென்று பார்வையிட்டார். அப்போது தரையில் கிடந்த பிளாஸ்டிக் பாட்டில் உள்ளிட்ட குப்பைகளை அவர் சேகரித்து அகற்றினார்.

சுரங்கப் பாதைகளை திறந்து வைத்து பேசிய பிரதமர் மோடி, இந்த வழித்தடத்தின் மூலம் பயணிக்கும் நேரமும், 55 லட்சம் லிட்டர் பெட்ரோலும் சேமிக்க முடியும் என்று கூறினார். கடந்த 8 ஆண்டுகளில் டெல்லியில் மெட்ரோ ரயில் சேவை இரு மடங்கு அதிகரிக்கப் பட்டுள்ளதாகக் கூறிய மோடி, பொதுமக்கள் தனி வாகனத்தில் பயணிப்பதை தவிர்த்துவிட்டு மெட்ரோவில் பயணிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

 

சுரங்கப் பாதையில் உள்ள சுவரோவியங்களை பள்ளி மாணவர்கள் பார்வையிடும் விதமாக வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணி முதல் 6 மணி வரை இந்த பாதையில் வாகன போக்குவரத்து தடை விதிக்கலாம் என்று யோசனை தெரிவித்தார். மேலும், குடிமக்கள் நலனுக்காக எடுக்கப்பட்ட பல முடிவுகள் மீது அரசியல் சாயம் பூசப்படுவது துரதிருஷ்டவசமானது என பிரதமர் மோடி கவலை தெரிவித்தார்.