கரோனா வைரஸுக்கு எதிராக இரு டோஸ்கள் தடுப்பூசி நடைமுறையில் இருக்கும் நிலையில் ஒருமுறை மட்டுமே செலுத்தும் தடுப்பூசியை அறிமுகம் செய்துள்ள ஜான்ஸன் அண்ட் ஜான்ஸன் நிறுவனத்தில் அவசரகாலத்துக்கு இந்தியாவில் பயன்படுத்திக் கொள்ள மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.
உருமாற்றம் அடைந்த டெல்டா உள்ளிட்ட பல்வேறு வகை கரோனா வைரஸ்களுக்கு எதிராகச் சிறப்பாகச் செயல்படும் வகையில் சிங்கிள் டோஸ் தடுப்பூசியை ஜான்ஸன் அன்ட் ஜான்ஸன் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
ஜான்ஸன் அன்ட் ஜான்ஸன் நிறுவனத்தின் தடுப்பூசிக்கு (Janssen Ad26.CoV2.S vaccine ) உலக சுகாதார அமைப்பு, அமெரிக்கா, பிரிட்டன் நாடுகள் ஒப்புதல் அளித்துள்ளன.
இதுவரை உலக மக்களின் பயன்பாட்டுக்கு இருக்கும் தடுப்பூசிகள் அனைத்தும் 2 டோஸ் கொண்டவையாகும், ஆனால், ஜான்ஸன் அன்ட் ஜான்ஸன் நிறுவனம் மட்டும் சிங்கிள் டோஸ் தடுப்பூசியை முதல்முறையாக அறிமுகம் செய்துள்ளது.
உலக சுகாதார அமைப்பின் அறிக்கையின்படி, ஜான்ஸன் அன்ட் ஜான்ஸன் நிறுவனத்தின் தடுப்பூசி கரோனா வைரஸின் லேசான மற்றும் மிதமான பாதிப்புக்கு எதிராக 66.3 சதவீதம் சிறப்பாகச் செயல்படுகிறது, தீவிரமான நோய் தொற்றுக்கு எதிராக 76.3சதவீதம் சிறப்பாகச் செயலாற்றுகிறது.
இந்தத் தடுப்பூசியை செலுத்திக்கொண்ட 28 நாட்களுக்குப்பின் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி உருவாகி தீவிரமான தொற்றுக்கு எதிராக 85.4 சதவீதமும், மருத்துவமனைக்கு செல்லவிடாமல் 93 சதவீதமும் தடுக்கிறது என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் இந்தியாவில் அவசரகாலப் பயன்பாட்டுக்கு அனுமதி வழங்கக் கோரி ஜான்ஸன் அண்ட் ஜான்ஸன் நிறுவனம் சார்பில் மத்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பிடம் விண்ணப்பித்திருந்தது. அதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின்படி, “ இந்தியாவில் அவசரகாலத் தேவைக்குப் பயன்படுத்திக் கொள்ள இந்திய அரசிடம் அனுமதி கோரி ஜான்ஸன் அண்ட் ஜான்ஸன் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.
கரோனா தடுப்பூசிகளில் முக்கிய மைல்கல்லாக, இந்திய மக்களுக்கு வழங்கப்படும் தடுப்பூசி சிங்கிள் டோஸ் கரோனா தடுப்பூசியாகும்” எனத் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இந்தியாவில் அவசரப் பயன்பாட்டுக்கு ஜான்ஸன் அண்ட்ஜான்ஸன் தடுப்பூசியைப் பயன்படுத்திக்கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ட்விட்டரில் அவர் பதிவிட்ட கருத்தில் “ இந்தியா தனது கரோனா தடுப்பூசி எண்ணிக்கையை விரிவுபடுத்தியுள்ளது. சிங்கிள் டோஸ் தடுப்பூசியை அறிமுகம் செய்துள்ள ஜான்ஸன் அண்ட் ஜான்ஸன் நிறுவனத்தின் தடுப்பூசியை அவசரத் தேவைக்கு பயன்படுத்திக்கொள்ள மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. தற்போது இந்தியாவில் 5 தடுப்பூசிகளுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. கரோனவுக்குஎதிரானப் போரில் இந்தியாவின் நிலைப்பாட்டை மேலும் வலுப்படுத்தும்” எனத் தெரிவித்துள்ளார்.