ட்விட்டரில் ப்ளூ டிக் வசதிக்கு 8 டாலர்களை மாதக் கட்டணமாக விதிக்கப்படுவது தொடர்பாக, அந்த வலைதளத்தின் புதிய உரிமையாளரான எலான் மஸ்க்கும், அமெரிக்க நாடளுமன்ற உறுப்பினர் அலெக்ஸ்சாண்டிரியாவுக்கு இடையே வார்த்தைப் போர் வெடித்தது.

கடந்த ஏப்ரல் இறுதியில் சமூக வலைதள நிறுவனமான ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கி இருந்தார். எனினும், இரு தரப்புக்குமான டீல் இழுபறியாக இருந்து வந்தது. இது தொடர்பாக நீதிமன்றம் வரை பஞ்சாயத்து சென்ற நிலையில், ஒருவழியாக ட்விட்டர் உரிமை எலன் மஸ்க்கிடம் வந்துள்ளது. இந்தநிலையில், அந்நிறுவனத்தின் உரிமையாளர் என்ற முறையில் பல்வேறு மறுசீரமைப்பு பணிகளை மஸ்க் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் பயனர்களின் அடையாளங்களை உறுதிப்படுத்தும் ப்ளூ டிக் வசதிக்கு 8 டாலர்களை மாதாந்திரக் கட்டணமாக வசூலிக்கப்படும் என்று எலான் மஸ்க் அறிவித்துள்ளார். இந்தக் கட்டண முறைக்கு ப்ளூ டிக் வைத்திருக்கும் பயனாளர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். எனினும், தனது முடிவில் எலான் மஸ்க் தீர்க்கமாக இருக்கிறார்.

அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் அலெக்ஸாண்ட்ரியா ஒகாசியோ – கோர்டெஸ் இம்முடிவை கிண்டல் செய்து “கருத்து சுதந்திரம் என்ற பெயரில் பில்லியனர், மக்களை விற்க முயற்சிக்கிறார். அதுதான் 8 டாலர் திட்டம்” என்று பதிவிட்டிருக்கிறார். இதற்கு எலான் மஸ்க், “உங்கள் கருத்துகள் பாராட்டுக்குரியது. தற்போது 8 டாலரை கட்டுங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

மேலும், அலெக்ஸ்சாண்டிரியாவின் தொழிற்சங்கங்கள் மூலம் விற்கப்படும் டீ-ஷர்ட் கட்டணம் குறித்தும் எலான் மஸ்க் மறைமுகமாக கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு அலெக்ஸ்சாண்டிரியா பதிலளித்தபோது, “இதனை நான் எப்போது பெருமையாகவே கொள்வேன். எனது தொழிலாளர்கள் பணியிடங்களில் இனவெறிக்கு உட்பட்டவர்கள் அல்ல. இங்குள்ள பொருட்கள் அமெரிக்காவில் தயாரிக்கப்படுகின்றன. எங்கள் குழு உழைக்கும் மக்களை கௌரவிக்கிறது, மதிக்கிறது” என்று பதிவிட்டுள்ளார்.