நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு தென்னை மரம் சின்னத்தை மாநில தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.

விடுதலை சிறுத்தைகள் கட்சி 1999-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்டது. அப்போதில் இருந்து 4 மக்களவைத் தேர்தல்கள், 4 சட்டப்பேரவை தேர்தல்களில் போட்டியிட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தல்களிலும் போட்டியிட்டுள்ளது. இக்கட்சி தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்படாத, அதே நேரத்தில் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட கட்சியாக உள்ளது. இதனால் இக்கட்சி ஒவ்வொரு தேர்தலை சந்திக்கும்போதும் ஒவ்வொரு சின்னத்தில் போட்டியிட்டு வந்துள்ளது. இந்நிலையில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதால், தங்களுக்கு பொதுச் சின்னம் ஒதுக்க வேண்டும் என்று விசிக கோரியிருந்தது. அதனடிப்படையில் இக்கட்சிக்கு பொது சின்னமாக தென்னை மரம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கட்சியின் செய்தித் தொடர்பாளர் கு.கா.பாவலன் கூறியதாவது: ஒவ்வொரு தேர்தலிலும் எங்கள் கட்சிக்கு சுயேச்சைகளுக்கு வழங்கப்படும் சின்னங்களே ஒதுக்கப்பட்டன. தற்போது 2 மக்களவை உறுப்பினர்கள், 4 சட்டப்பேரவை உறுப்பினர்களை கொண்ட கட்சியாக இருப்பதால், தங்களை அங்கீகரித்து பொது சின்னம் ஒதுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தில் கோரி இருந்தோம். முதல் முன்னுரிமையாக தென்னை மரம் சின்னத்தை கொடுத்திருந்தோம். இதை பரிசீலித்த மாநில தேர்தல் ஆணையம் தென்னை மரம் சின்னத்தை ஒதுக்கியுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.