தேசிய நிறுவனச் சட்டத் தீர்ப்பாயம், தேசிய நிறுவனச் சட்ட மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம் உள்ளிட்ட நாட்டின் முக்கியத் தீர்ப்பாயங்களில் உள்ள காலியிடங்களை உடனே நிரப்புமாறு உச்ச நீதிமன்றம் மத்திய அரசை அறிவுறுத்தியுள்ளது. சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்ப்பாயங்கள் சீர்திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் தொடரப்பட்ட வழக்கில் இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே செயல்பட்டுவரும் சில தீர்ப்பாயங்களைக் கலைத்துவிட்டு, அவற்றை நீதித் துறையுடன் இணைக்க வகைசெய்யும் இந்தச் சட்டம் தீர்ப்பாயங்களின் உறுப்பினர்களுக்குக் குறைந்தபட்ச வயது 50 எனவும் அவர்களின் பதவிக்காலம் அதிகபட்சம் 4 ஆண்டுகள் எனவும் வரையறுத்துள்ளது. தீர்ப்பாய உறுப்பினர்கள் குறித்த தேர்வு மற்றும் தெரிந்தெடுப்புக் குழுவின் பரிந்துரைகள் மத்திய அரசுக்கு அளிக்கப்படும் என்ற பிரிவானது ஏற்கெனவே உச்ச நீதிமன்றம், மெட்ராஸ் பார் அசோசியேஷன் வழக்கில் 2017-ம் ஆண்டின் நிதிச் சட்டத்தில் செல்லாது என்று உத்தரவிட்ட சட்டப் பிரிவுகளைப் போன்று உள்ளது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பை இல்லாநிலையாக்கவே இந்தச் சட்டப் பிரிவு தக்கவைத்துக்கொள்ளப்பட்டிருக்க வேண்டும் என்று கருத இடமளிக்கும் வகையில் தீர்ப்பாயச் சீர்திருத்தச் சட்டம் அமைந்துள்ளது.
தீர்ப்பாய உறுப்பினர்களின் நியமனத்தில், நிர்வாகத் துறையின் செல்வாக்கு தவிர்க்கப்பட வேண்டும் என்பதே உச்ச நீதிமன்றத்தின் கருத்து. தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள தீர்ப்பாயங்கள் சீர்திருத்தச் சட்டத்தின்படி தேர்வு மற்றும் தெரிந்தெடுப்புக் குழுவின் பரிந்துரைகளைக் குறித்து முடிவெடுக்க மூன்று மாத காலம்வரையில் மத்திய அரசு கால அவகாசத்தை நீட்டித்துக்கொள்ள முடியும். நீதித் துறையின் முடிவுகளுக்கு மதிப்பளித்தாலும் நாடாளுமன்றத்தின் சட்டமியற்றும் அதிகாரத்தில் குறுக்கீடுகள் கூடாது என்பது மத்திய அரசின் நிலைப்பாடாக இருக்கிறது. மெட்ராஸ் பார் அசோசியேஷன் வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட சட்டப் பிரிவுகள் அரசியலமைப்புக்கு எதிரானவை என்ற காரணத்தால், அவ்வாறு அறிவிக்கப்படவில்லை. எனவே, உச்ச நீதிமன்றம் தமது தீர்ப்புக்கு மாறாக நிர்வாகச் சீர்திருத்தச் சட்டத்தின் பிரிவு அமைந்துள்ளது என்று கொள்ள வேண்டிய அவசியமில்லை என்ற பார்வையும் மத்திய அரசால் முன்வைக்கப்படுகிறது.