சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக இன்று (மார்ச் 28) பதவியேற்ற என்.மாலா மற்றும் சவுந்தர் ஆகியோருக்கு தலைமை நீதிபதி முனிஸ்வர் நாத் பண்டாரி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

சென்னை உயர் நீதிமன்ற புதிய கூடுதல் நீதிபதிகாக என்.மாலா, சவுந்தர் ஆகியோரை நியமனம் செய்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கடந்த வாரம் ஆணை பிறப்பித்தார். இதையடுத்து, இருவரும் இன்று உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகளாக பதவியேற்றனர். இவர்களுக்கு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்.

புதிய நீதிகளை அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம், பார்கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ், உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன், மெட்ராஸ் பார் அசோசியேசன் தலைவர் கமலநாதன், பெண் வழக்கறிஞர் சங்க தலைவி லூயிசாள், லா அசோசியேசன் தலைவர் ஆகியோர் வரவேற்று பேசினர்.

பின்னர் புதிய நீதிபதிகள் ஏற்புரையாற்றினர்.இந்த நிகழ்ச்சியில், கூடுதல் அட்வகேட் ஜெனரல்கள், அரசு பிளீடர் பி.முத்துக்குமார், குற்றவியல் அரசு தலைமை வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, அகில இந்திய பார்கவுன்சில் துணை தலைவர் எஸ்.பிரபாகரன், உயர் நீதிமன்ற பதிவாளர்கள், வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

புதிய நீதிபதிகள் நியமனத்தையடுத்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது. பெண் நீதிபதிகள் எண்ணிக்கையும் 13 ஆக உயர்ந்துள்ளது. உயர் நீதிமன்றத்திற்கு அனுமதிக்கப்பட்ட 75 நீதிபதிகள் பணியிடங்களில் தற்போது 14 இடங்கள் காலியாக உள்ளன.