உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க செல்பவர்களுக்கு வசதியாக சென்னையில் இருந்து 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய 9 மாவட்டங்களில் ஊரகஉள்ளாட்சித் தேர்தல் வரும் 6, 9-ம்தேதிகளில் 2 கட்டமாக நடக்கிறது. இந்த மாவட்டங்களை சேர்ந்த மக்கள் சென்னையில் அதிக அளவில் வசிக்கின்றனர். அவர்களில் பலரும் ஒவ்வொரு தேர்தலின்போதும் சொந்த ஊர் சென்று வாக்களித்து வருகின்றனர்.
உள்ளாட்சித் தேர்தலிலும் சொந்த ஊரில் வாக்களிக்கச் செல்பவர்களுக்கு வசதியாக கூடுதல் பேருந்துகளை இயக்க அரசு போக்குவரத்து கழகங்கள் முடிவு செய்துள்ளன. இதுபற்றி போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறும்போது, ‘‘ஊரக உள்ளாட்சித் தேர்தலையொட்டி வரும்5-ம் தேதியும், 8-ம் தேதியும் சென்னையில் இருந்து 9 மாவட்டங்களுக்கு தேவைக்கு ஏற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும். குறிப்பாக கள்ளக்குறிச்சி, விழுப்புரம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். நீண்ட தூரம் செல்வோர் முன்பதிவு செய்து பயணம் செய்யலாம்’’ என்றனர்.