உக்ரைன் நிலவரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி இன்றும் ஆலோசனை நடத்தினார்.

உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்க ‘ஆபரேஷன் கங்கா’ என்ற பெயரில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு சாலை மார்க்கமாக இந்தியர்கள் வரவழைக்கப்பட்டு, அங்கிருந்து விமானங்கள் மூலம் அவர்கள் தாயகம் அழைத்து வரப்படுகின்றனர்.

இந்தச் சூழலில் இந்திய மாணவர்களை மீட்பது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து ஆலோசனை செய்து வருகிறார்.

இந்தநிலையில் உக்ரைன் நிலவரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி இன்றும் ஆலோசனை நடத்தினார். இதுபோன்ற கூட்டம் நடைபெறுவது இது 8-வது முறையாகும். வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், மத்திய அமைச்சர்அமைச்சர் பியூஷ் கோயல், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் வெளியுறவுத்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்த ஆலோசனையின்போது பிரதமர் மோடி உக்ரைனில் இருந்து இதுவரை எத்தனை இந்தியர்கள் மீட்கப்பட்டனர், அங்கு சிக்கி இந்தியர்களை மீட்க அரசு சார்பில் என்ன என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது என்பது குறித்து கேட்டறிந்தார். அதேபோன்று உக்ரைன் – ரஷ்யா இடையே தொடர்ச்சியாக போர் நீடித்துவரும் நிலையில் அதனால் இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார்.