ரூ.700 கோடி செலவில் மேஜர் தயான்சந்த் விளையாட்டுப் பல்கலைக்கழகம் அமைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.

ஹாக்கி விளையாட்டில் புகழ்பெற்ற மேஜர் தயான்சந்த் நினைவாக உத்தரபிரதேச மாநிலம் மீரட் நகரில் இந்தப் பல்கலைக்கழகம் அமையவுள்ளது. விளையாட்டு பல்கலைக்கழகத்துக்கு நேற்று அடிக்கல் நாட்டி பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

மீரட் நகரம் நமது பலம் மற்றும்கலாச்சாரத்தின் மையமாக அமைந்துள்ளது. சமண தீர்த்தங்கரர்களின் தேசமாகவும், சிந்து சமவெளி நாகரிக காலத்திலிருந்தே இந்தியாவின் வலிமையையும் பறைசாற்றும்நகரமாக மீரட் இருந்து வந்துள்ளது.

நாட்டில் உயர்ந்த விளையாட்டு விருதுக்கு மேஜர் தயான்சந்த் பெயர் சூட்டப்பட்டது. தற்போது மீரட்டில் அமையும் விளையாட்டு பல்கலைக்கழகம் அவருக்கு அர்ப்பணிக்கப்படுகிறது. ரூ.700 கோடி செலவில் அமையும் இந்த பல்கலைக்கழகம், இளைஞர்களுக்கு சர்வதேச அளவிலான விளையாட்டு வசதிகளை அளிக்கும். ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான ஆடவர் மற்றும் மகளிர் இங்கு பட்டம் பெறவுள்ளனர்.

விளையாட்டு சாதனங்கள் உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு பெற வேண்டும். புதிய கல்விக்கொள்கையில் விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அறிவியல், கணிதம் உள்ளிட்ட பாடங்களுக்கு இணையாக விளையாட்டும் கற்று தரப்படும்.

இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

முன்னதாக மீரட் நகருக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடியை உ.பி. ஆளுநர் ஆனந்தி பென் படேல், முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

இந்தப் பல்கலைக்கழகத்தில் ஆண்டுதோறும் 1,080 விளையாட்டு வீரர்களுக்கு (540 ஆடவர், 540 மகளிர்) பயிற்சி அளிக்கும் வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன. உலகத் தரத்தில் நவீன வசதிகள் இங்கு அமைக்கப்படவுள்ளன. இந்த பல்கலைக்கழக வளாகத்தில் நவீன சிந்தெடிக் ஹாக்கி மைதானம், கால்பந்து மைதானம், கூடைப்பந்து, வாலிபால், ஹேண்ட்பால் மைதானங்கள், கபடி ஆடுகளம் ஆகியவையும் அமைக்கப்படவுள்ளன.

மேலும் இங்கு டென்னிஸ் மைதானம், நவீன உடற்பயிற்சி மையம், சிந்தெடிக் ஓடுபாதை, நீச்சல்குளம், பல்நோக்கு வளாகம், சைக்கிள் பயிற்சி மைதானம் அமைக்கப்படும். அதுமட்டுமல்லாமல், துப்பாக்கிச் சுடுதல், ஸ்குவாஷ், ஜிம்னாஸ்டிக், பளு தூக்குதல், வில் வித்தை,கனோயிங் மற்றும் கயாகிங் படகுப் பயிற்சி வசதிகள் உள்ளிட்டவையும் அமையவுள்ளன. -பிடிஐ