மின்வாரியத்தில் 56 ஆயிரம் காலிப் பணியிடங்கள் உள்ளன. முன்னுரிமையின் அடிப்படையில் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் அருகே அற்புரதப் புரத்தில் இலவச மின் இணைப்பு வழங்கும் நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்த மின்சாரத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
“மாதந்தோறும் மின் கட்டணத்தைக் கணக்கிடுவது தொடர்பாக தேர்தல் வாக்குறுதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஒவ்வொரு வீட்டுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவது தொடர்பாகவும், அதேசமயம் மின் கணக்கீட்டாளர் பணி நியமனம் தொடர்பாகவும் பரிசீலனையில் உள்ளது. இதில், எந்த அளவுக்குச் சாத்தியக்கூறுகள் உள்ளதோ, அதைப் பொறுத்து நிச்சயம் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது, கணக்கீடு செய்யக்கூடிய பணியாளர்கள் 50 சதவீத அளவில்தான் உள்ளனர்.
கடந்த 5 மாத ஆட்சிப் பொறுப்பேற்று 5 மாத காலத்தில் 505 தேர்தல் வாக்குறுதிகளில் 202 தேர்தல் வாக்குறுதிகள் முழுவதுமாக நிறைவேற்றப்பட்டுள்ளன. படிப்படியாக அனைத்துத் தேர்தல் வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும்.
மின்கம்பிகள் அறுந்து விழுந்து உயிர் இழப்பு ஏற்படுவது துரதிர்ஷ்டவசமானது. வருங்காலத்தில் தரமான மின் கம்பிகள் அமைக்கப்பட்டு, அதற்கான கட்டமைப்புகள் வலுப்படுத்தப்படும்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் புதியதாக 9 துணை மின் நிலையங்களும், 15 துணை மின் நிலையங்களைத் தரம் உயர்த்தவும் 163 கோடியில் திட்ட மதிப்பீடுகள் தயார் செய்யப்பட்டுள்ளன.
மின்வாரியத்தில் 56 ஆயிரம் காலிப் பணியிடங்கள் உள்ளன. முன்னுரிமையின் அடிப்படையில் பணியிடங்கள் நிரப்பப்படும். மின்வாரியம் 1 லட்சத்து 59 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் உள்ளது. இதற்கு ஆண்டு 16 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வட்டி செலுத்தக்கூடிய நிலையில், அதிகபட்ச வட்டிக்கு கடந்த ஆட்சியாளர்கள் கடன் வாங்கி உள்ளனர். இதெல்லாம் சீரமைக்க வேண்டிய நிலையில் நாம் உள்ளோம். இப்போது அவசர அவசியம் கருதி, எந்தெந்தப் பணியிடங்கள் தேவையோ அவை நிரப்பப்படும்”.
இவ்வாறு அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.