ஐரோப்பாவில் நிலவும் கடுமையான வெப்ப அலையானது, உலக உணவு நெருக்கடியை மோசமாக்கலாம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
பூமியின் வெப்பநிலை உயர்வு காரணமாக உலக நாடுகள் வறட்சியையும், வெள்ள பாதிப்பையும் சந்தித்து வருகின்றன. அதன் வெளிப்படாக அரிசி, தானிய உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே உலக நாடுகளுக்கு அரிசி ஏற்றுமதி செய்வதை இந்தியா தடைச் செய்துள்ளது.
இந்த நிலையில், அதீ திவிர வெப்ப அலை காரணமாக ஐரோப்பாவில் தானியங்களின் உற்பத்தி 60% குறைந்துள்ளதாகவும், கடும் வெப்பம் ஐரோப்பாவை வாட்டி வதைப்பதாகவும் ஐரோப்பிய விவசாய அமைப்பான கோபா கோகெகா அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும், கடினமான காலம் இன்னும் முடியடையவில்லை என்று கிரீஸ் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸ் எச்சரித்தார். இதற்கிடையில், ஐரோப்பாவில் நிலவும் கடுமையான வெப்ப அலை காரணமாக, உலக உணவு நெருக்கடி இன்னும் மோசமாகலாம் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றன.
முன்னதாக, செவ்வாய்க்கிழமை சர்வதேச நாணய நிதியம் (IMF) அரிசி ஏற்றுமதி மீதான கட்டுப்பாட்டை நீக்குமாறு இந்தியாவை வலியுறுத்தியது. இந்தக் கட்டுப்பாடு குறித்து சர்வதேச நாணய நிதியத்தின் தலைமைப் பொருளாதார நிபுணரான ஆலிவர் பேசும்போது, ”இந்தக் கட்டுப்பாடுகள் உலகின் பிற பகுதிகளில் உணவுப் பொருட்களின் விலையில் ஏற்ற இறக்கத்தை அதிகரிக்கக் கூடும்” என்றார்.
இந்தியா பாஸ்மதி அல்லாத அரிசி ஏற்றுமதிக்கு ஜூலை 20-ஆம் தேதி தடை விதித்தது. பல்வேறு மாநிலங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக அரிசி உற்பத்தி பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், உள்நாட்டில் அரிசி தட்டுப்பாடு ஏற்படுவதை தடுக்கும் நோக்கில், அரிசி ஏற்றுமதிக்கு தடைவிதித்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்தது. இந்நிலையில், அரிசி தேவைக்கு இந்தியாவை நம்பி இருக்கும் நாடுகள் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கின்றன.
உலகளாவிய அரிசி ஏற்றுமதியில் இந்தியா 40 சதவீதம் பங்கு வகிக்கிறது. இந்தியாவிலிருந்து 140 நாடுகளுக்கு அரிசி ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்தச் சூழலில் அரிசி ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்திருப்பதால் சர்வதேச அளவில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.