சென்னை: ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்துக்காக ராஜீவ் காந்தி மருத்துவமனை மாணவர் விடுதியை மாற்றம் செய்யும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை வைத்துள்ளது.

இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை மருத்துவக் கல்லூரியில் (MMC) படித்துவரும் முதுநிலை மாணவர்களின் விடுதி ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு அருகில் அமைந்துள்ளது. அந்த விடுதியில் தங்கியுள்ள மாணவர்கள் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் ஏற்படுத்துவதற்காக முதுநிலை மருத்துவ மாணவர் விடுதியை காலி செய்து வேறு இடத்தில் அமைத்திட தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்த முடிவு ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை சேவைகளை கடுமையாகப் பாதிக்கும்.

இந்த மருத்துவமனையோடு இணைக்கப்பட்ட சென்னை மருத்துவக் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கென கட்டப்பட்டுள்ள தங்கும் விடுதி 60 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. சூப்பர் ஸ்பெசாலிட்டி மாணவர்கள் உட்பட 430 பேர் இங்கு தங்கியுள்ளனர். தற்போது அரசு மேற்கொண்டுள்ள முடிவின் காரணமாக, மாணவர் விடுதி திருவல்லிக்கேணி பகுதிக்கு மாற்றப்பட உள்ளதாக தெரிகிறது.

இதனால் மருத்துவர்கள் சில மணி நேரங்கள் பயணித்தே மருத்துவமனையை அடைய முடியும்.
இது நோயாளிகளுக்கான சிகிச்சைத் தரத்தில் பாதிப்பை ஏற்படுத்துவதோடு, அவசர கால மருத்துவத்தை மேற்கொள்வதும் தடைபடும். கூடுதலான நேரம் இடைவிடாமல் உழைக்கும் கட்டாயத்தில் உள்ள மருத்துவர்களுக்கு இதனால் கூடுதல் சுமை ஏற்படும். எனவே, மருத்துவ சேவையை கடுமையாக பாதிக்கும் முடிவினை தமிழக அரசும், நீதித்துறையும் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என சிபிஐ(எம்) மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

 

தேசிய மருத்துவக் கவுன்சில் விதிகளின்படி மருத்துவமனை வளாகத்திற்குள்ளேயே முதுநிலை மாணவர்கள் விடுதி அமைய வேண்டும். அதிகபட்சமாக 1 கி.மீ., தொலைவில் விடுதி அமையலாம். விடுதி அதிக தூரம் இருக்கும்பட்சத்தில் மருத்துவமனையின் அங்கீகாரமும் பாதிக்கப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.

எனவே, நீதித் துறையும், தமிழக அரசாங்கமும், ராஜீவ்காந்தி மருத்துவமனை நிர்வாகமும் இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். முதுநிலை மருத்துவ மாணவர் விடுதி அதே இடத்தில் தொடர்ந்து செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறோம்” என்று அதில் கூறியுள்ளார்.