ராமேசுவரத்தில் அக்னி தீர்த்தம் உள்ளிட்ட பகுதிகளில் கடல் உள்வாங்கியது. இதனால், புனித நீராட வந்த பக்தர்கள் அச்சம் அடைந்தனர்.

ராமேசுவரம், தனுஷ்கோடி, முகுந்தராயர் சத்திரம், அரிச்சல்முனை உள்ளிட்ட கடல் பகுதிகளில் காற்றின் வேகம் கடந்த 3 நாட்களாக வழக்கத்தைவிட அதிகரித்துள்ளது. கடல் அலைகள் ஆக்ரோஷத்துடன் எழுகின்றன. இதன் தொடர்ச்சியாக ராமநாதபுரம் அக்னி தீர்த்தக் கடற்கரை, சங்குமால் கடற்கரை, மீன்பிடித் துறைமுகம் ஆகிய பகுதிகளில் கரையில் இருந்து 10 மீட்டர் தூரத்துக்கு கடல் நேற்று உள்வாங்கியது. இதனால் அப்பகுதி சேறும், சகதியும், பவளப் பாறைகளுமாகக் காட்சியளித்தன. அதனால் அக்னி தீர்த்தக் கடற்கரையில் புனித நீராட வந்த பக்தர்கள் அச்சம் அடைந்தனர்.