சட்டமன்றத் தேர்தலுக்கு முன் வேல் யாத்திரையைக் கையில் எடுத்த தமிழக பாரதிய ஜனதா, தற்போது மீண்டும் ஒரு யாத்திரை மேற்கொண்டுள்ளது. மக்கள் ஆசி யாத்திரை என்ற பெயரில், கோவை , திருப்பூர் , ஈரோடு , நாமக்கல் , சேலம் ஆகிய மாவட்டங்களில் பாரதிய ஜனதா கட்சியினர் சுற்றுப் பயணம் செய்தனர். புதிதாக பொறுப்பேற்ற அனைத்து அமைச்சர்களும் மக்களை நேரடியாக சந்தித்து ஆசி வாங்க பயணிக்கிறோம் என அனைத்து இடங்களிலும் கூறினார் மத்திய இணையமைச்சர் எல்.முருகன். அது மட்டும் தான் பயணத்தின் திட்டமா என்றால் இல்லை என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் எடுத்துக்கூறும் யாத்திரை என்று சொல்லப்பட்டாலும், பாஜகவினரை அவர்களை உற்சாகப்படுத்தும் விதமாகவும், அடுத்த தேர்தலுக்கு கட்சியினரை தயார்படுத்தும் விதமாகவே அக்கட்சித் தலைவர்களின் பேச்சு இருந்ததை பார்க்க முடிந்தது. 2024 மக்களவைத் தேர்தல், அடுத்த சட்டமன்றத் தேர்தலுக்கு தற்போதே ஆயத்தமாகும் வகையில் பாஜக யாத்திரை அமைந்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் வெற்றி பெற்ற 4 எம்எல்ஏக்களில், இருவர் கொங்கு பகுதியைச் சேர்ந்தவர்கள். இந்தப் பகுதியில் கட்சியை மேலும் பலப்படுத்தும் வகையில், கொங்கு மண்டலத்தில் மக்கள் ஆசி யாத்திரை நடத்தப்பட்டிருக்கலாம் என கருத்தும் நிலவுகிறது.