இந்து சமய அறநிலையத் துறை ஆலோசனை குழு அலுவல்சாரா உறுப்பினர் சாந்தலிங்க மருதாசல அடிகளாருக்கு எதிராக சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியவர்கள் மீதான புகாரில் உரிய நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் சண்டிகேசுவர நாயனார் நற்பணி மன்றத்தின் தலைவரான டி.சுரேஷ்பாபு தாக்கல் செய்த மனுவில், ’தமிழக அரசின் சார்பில் இந்து சமய அறநிலையத்துறை ஆலோசனை குழு அலுவல்சாரா உறுப்பினராக திருப்பேரூர் அருள்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார் நியமிக்கப்பட்டுள்ளார். இவரது நியமனத்தை விமர்சிக்கும் வகையில் முகநூலில் ராஜநாக முனிவர் என்ற பெயரில் தரக்குறைவான வார்த்தைகளுடன் சில கருத்துகள் பதிவிடப்பட்டுள்ளது.
சாந்தலிங்க மருதாசல அடிகளாருக்கு எதிராக கருத்துக்களை பதிவிடும் நபர்கள் மீது வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுக்கக்கோரி கடந்த ஜனவரி 18-ம் தேதி கோவை மாநகர காவல் ஆணையர், சைபர் குற்றப்பிரிவு ஆய்வாளர் ஆகியோரிடம் புகார் அளித்தேன். ஆனால், அந்த புகாரின் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்’ என கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி எம்.நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சுரேஷ்பாபு அளித்த புகார் மனுவை கோவை சைபர் குற்றப் பிரிவு காவல்துறையினர் நான்கு வாரங்களில் விசாரித்து, சட்டத்திற்குட்பட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.