அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 1,200-க்கும் மேற்பட்ட மருந்தாளுநர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என மருந்தாளுநர் சங்க மாநில பிரதிநிதித்துவ பேரவை வலியுறுத்தி உள்ளது.

தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநர் சங்க மாநில மையம் சார்பில், மாநில பிரதிநிதித்துவப் பேரவைக் கூட்டம் கரூர் நாரத கானசபாவில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு, அமைப்பின் மாநிலத் தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில பொதுச் செயலாளர் ஆ.செல்வம் சிறப்புரையாற்றினார். கவுரவத் தலைவர் கெ.சக்திவேல் வரவேற்றார்.

கூட்டத்தில், அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 1,200-க்கும் மேற்பட்ட மருந்தாளுநர் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அனைத்து மருந்தாளுநர்களுக்கும் கூடுதலாக 3 கட்ட பதவி உயர்வு வழங்க வேண்டும்.

கரோனா தொற்று காலத்தில் உயிரை பணயம் வைத்து பணியாற்றிய அனைத்து நிலை மருந்தாளுநர்கள், மருந்துக் கிடங்கு அலுவலர்களுக்கு கரோனா ஊக்கத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரிந்து வரும் மருந்தாளுநர்களின் பணி நேரத்தை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை என்ற உத்தரவை அமல்படுத்த வேண்டும்.

39 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் முறையாக பணி நியமனம் செய்யப்பட்ட மருந்தாளுநர்களின் பணியை உடனடியாக பணி வரன்முறை செய்ய வேண்டும். தலைமை மருந்தாளுநர், மருந்துக் கிடங்கு அலுவலர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும்.

42 துணை இயக்குநர் அலுவலக மருந்துக் கிடங்குகளில் மருந்தாளுநர் பணியிடங்களை உருவாக்கி, பதவி உயர்வுக்காக காத்திருப்போருக்கு பதவி உயர்வு வழங்கி நிரப்ப வேண்டும். 385 வட்டார, மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருந்தகக் கண்காணிப்பாளர் பணியிடம் உருவாக்க வேண்டும். இயக்குநரகங்களில் துணை இயக்குநர் மருந்தியல், டிடி பார்மசி பணியிடம் உருவாக்க வேண்டும். மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் மருந்தாளுநர் பணியிடங்களை உருவாக்க வேண்டும்.

நோயாளிகளின் எண்ணிக்கைக்கேற்ப மருத்துவ விதி தொகுப்பின்படி கூடுதலாக மருந்தாளுநர் பணியிடங்களை உருவாக்க வேண்டும். பட்டய மருந்தாளுநர்களின் வேலைவாய்ப்பைப் பாதிக்கும் அரசாணையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். அனைத்து மருத்துவமனைகளிலும் முறையான, பாதுகாப்பான மருந்துக் கிடங்குகளை அரசு அமைக்க வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.