சென்னை: சென்னையில் வரும் 11-ம் தேதி நடத்த திட்டமிட்டுள்ள அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்குமாறு ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைப்பாளர்கள் பதவி ரத்து, பொதுச் செயலாளர் தேர்தல் உட்பட 16 தீர்மானங்களை நிறைவேற்ற உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதிமுகவில் ஒற்றைத் தலைமை சர்ச்சை கிளம்பியுள்ள நிலையில், முன்னாள் முதல்வர் பழனிசாமி தரப்பினர் வரும் 11-ம்தேதி நடத்த திட்டமிட்டுள்ள பொதுக்குழுக் கூட்டத்துக்கு, அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் பொருளாளர் என்ற அடிப்படையில் அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், அவர் பொதுக்குழுவில் கணக்குகளை அளிக்குமாறு கோரப்பட்ட தாகவும் கூறப்படுகிறது. அவரதுஆதரவாளர்களான ஆர்.வைத்தி லிங்கம், மனோஜ்பாண்டியன், தர்மர், சையதுகான் உள்ளிட்டோ ருக்கும் அழைப்பிதழ் அனுப்பப்பட் டுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த ஜூன் 23-ம் தேதி நடந்தபொதுக்குழுவில் 23 தீர்மானங்கள் நிராகரிக்கப்பட்டன. இந்நிலையில், வரும் 11-ம் தேதி நடைபெறும் பொதுக்குழுவில் அவை கொண்டுவரப்பட உள்ளன. இந்த தீர்மானங்கள் குறித்து, பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அனுப்பப்பட்ட அழைப்பிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில், ஏற்கெனவே நடைபெற்ற கூட்டத்தில், பொதுக்குழு உறுப்பினர்கள் விண்ணப்பித்ததன் அடிப்படையில் இந்த பொதுக்குழு கூட்டப்படுவதாகவும், இதில் தீீர்மானிக்க வேண்டிய பொருள் குறித்து 2,432 பொதுக்குழு உறுப்பினர்கள் கையொப்பமிட்டு கடிதம்அளித்துள்ளதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

மேலும், இந்த பொதுக்குழு வில், அமைப்புத் தேர்தல் மூலம்தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்தல், பெரியார், அண்ணா, ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க மத்திய அரசை வலியுறுத்துவது குறித்த தீர்மானங்கள் விவாதிக்கப் படுகின்றன.

இதுதவிர, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரட்டைத் தலைமையை ரத்து செய்து, அதிமுக அடிப்படை உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படும் பொதுச் செயலாளர் பொறுப்புகுறித்து விவாதித்து முடிவெடுப்பது, இடைக்கால பொதுச் செயலாளர் பொறுப்பை உருவாக்குவது குறித்து விவாதித்து முடிவெடுப்பது, இடைக்கால பொதுச் செயலாளரை பொதுக்குழுவில் தேர்வு செய்யவும், பொதுச் செயலாளர் தேர்தல் குறித்து அறிவிப்பு செய்யவும் வேண்டுதல், கட்சியின் தற்போதைய நிலை குறித்து முடிவெடுத்தல் தொடர்பான தீர்மானங்களும் விவாதிக்கப்படுகின்றன.

மக்கள் நலத் திட்டங்களை ரத்து செய்தது, விலைவாசி உயர்வு,சட்டம் – ஒழுங்கைப் பாதுகாக்க தவறியதற்காக திமுக அரசுக்கு கண்டனம், மேகேதாட்டு அணை கட்டும் முயற்சியைத் தடுக்கவும், இலங்கைத் தமிழர் நலன் காக்கவும், நெசவாளர் துயர் துடைக்குமாறும் மத்திய, மாநில அரசுகளைவலியுறுத்தல், வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு திமுக அரசை வலியுறுத்துதல், அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் பொய் வழக்குபோடும் திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்தல் என மொத்தம் 16 தீர்மானங்கள் மீது விவாதித்து, முடிவெடுக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட் டுள்ளது.

ஒருவேளை, கரோனா கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு, மண்டபத்தில் பொதுக்குழு நடைபெற இயலாத சூழல் ஏற்பட்டால், காணொலி மூலம் செயற்குழு, பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும் என்றும் அழைப்பிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.