உக்ரைனிலிருந்து திரும்பிய மருத்துவ மாணவர்களின் நலன் காக்க நடவடிக்கை வேண்டும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
உக்ரைனிலிருந்து திரும்பிய மாணவர்கள் இந்திய மருத்துவ கல்லூரிகளில் சேர அனுமதிக்க முடியாது என தேசிய மருத்துவ ஆணையம் சமீபத்தில் தெரிவித்தது. இது உக்ரைனிலிருந்து நாடு திரும்பிய மாணவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
எனவே மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தமிழ முதல்வர் ஸ்டாலின் கடிதம் ஒன்றை பிரதமர் மோடிக்கு எழுதி இருக்கிறார்.
அதில் ” உக்ரைனில் மருத்து பயின்ற 2,000க்கும் அதிகமான மாணவர்கள் தமிழகம் திரும்பியுள்ளார்கள்.இந்தியாவிலே தமிழகத்தில்தான் இந்த எண்ணிக்கை அதிகம். நாடு திரும்பிய மாணவர்கள் கல்வியை தொடர முடியாத நிலையில் உள்ளனர். அவர்கள் உக்ரைன் சென்று தங்கள் மருத்துவ படிப்பை தொடர முடியாத சூழலில் உள்ளனர்.
இந்த நிலையில்உக்ரைனில் இருந்து திரும்பிய மருத்துவ மாணவர்களின் நிலை குறித்து மக்களவையில் சமீபத்தில் அளிக்கப்பட்ட பதிலால் மாணவர்கள் மத்தியில் கவலை ஏற்பட்டுள்ளது. மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.மாணவர்கள் கல்வி தொடர்பாக ஏற்கனவே தாமதம் ஆகிவிட்டது. மாணவர்கள் இந்தியாவிலோ அல்லது வெளி நாட்டிலோ மருத்துவம் தொடர வழிவகை செய்ய வேண்டும். இது தொடர்பாக இந்தியப் பிரதமர் எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் தமிழக அரசு முழு ஒத்துழைப்பை அளிக்கும் என்று உறுதியளிக்கிறேன்” என தமிழக முதல்வர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.