தொழிலாளர் வருங்கால வைப்புநிதி உறுப்பினர்களின் ஆதார் எண்ணை, வைப்பு நிதி கணக்குடன் வரும் 31-ம் தேதிக்குள் இணைக்க வேண்டும் என நிறுவனமுதலாளிகளுக்கு மத்திய அரசுஉத்தரவிட்டுள்ளதாக தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகம் (இபிஎஃப்ஓ) தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் சமூக பாதுகாப்புச் சட்டம், பிரிவு 142-ன் படி,தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் தங்களது வருங்கால வைப்பு நிதி கணக்கில் இருந்து பணம் எடுத்தல், ஓய்வூதியம் பெறுதல், காப்பீட்டு பலன்களைப் பெற ஆதார் எண்ணை தொழிலாளர்வருங்கால வைப்பு நிதி கணக்குடன் இணைக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, நிறுவன முதலாளிகள் தங்களுடைய ஊழியர்களின் ஆதார் எண்ணை, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக் கணக்குடன் கட்டாயம் இணைக்க வேண்டும். இந்த இணைப்பை மேற்கொள்ள வருங்கால வைப்பு நிதி அலுவலகம் வரும் 31-ம் தேதி வரை அவகாசம் வழங்கியுள்ளது.
எனவே, அனைத்து நிறுவன முதலாளிகளும் தங்களது ஊழியர்களின் ஆதார் எண்ணை, வருங்கால வைப்பு நிதிக் கணக்குடன் இணைக்க வேண்டும். இந்தக் கால அவகாசத்துக்குள் நிறுவன முதலாளிகள் இப்பணியை செய்து முடிக்க வேண்டும். இதன் மூலம் ஊழியர்களுக்கும், நிறுவன முதலாளிகளுக்கும் தடையில்லா சேவை வழங்க முடியும்.
‘பாரத் கா அம்ருத் மகோத்சவ்’ திட்டத்தின் கீழ், ஊழியர்கள், மின்னணு முறையில் நாமினேஷன் தாக்கல் செய்வது குறித்து நிறுவனமுதலாளிகள் தங்களது ஊழியர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இதற்கான வசதி உறுப்பினர்களின் இணைய பக்கத்தில் வழங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி உறுப்பினர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்கள் தங்களுக்கு பண உதவி தேவைப்படும்போது, அவர்களே எளிதாக இபிஎஃப்ஓ நிறுவனத்தின் சேவையை எளிதாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
இந்தத் தகவல், மண்டல அலுவலக (தெற்கு), வருங்கால வைப்பு நிதி ஆணையர்-1 பி.ஹாங்சிங் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.