நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆப்ரிக்க பன்றி காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இந்த நோய் கேரளாவிலும் தற்போது பரவியுள்ளது. கேரளாவில் உள்ள வயநாடு மாவட்டத்தின் இரு பன்றி பண்ணைகளில் இந்த பன்றி காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கேரளாவின் மனத்தவாடி என்ற பகுதியில் இந்த பன்றி பண்ணைகள் உள்ளன. இந்த பண்ணைகளில் பன்றிகளுக்கு காய்ச்சல் ஏற்பட்டு விலங்குகளின் உயிரிழப்புகள் ஏற்பட்டன. இந்நிலையில், இங்கிருந்து மாதிரிகள் எடுக்கப்பட்டு மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள தேசிய விலங்குகள் நோய் ஆய்வு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதன் முடிவில் இந்த இரண்டு பண்ணை பன்றிகளுக்கு ஆப்ரிக்கா பன்றி காய்ச்சல் பரவல் உறுதியாகியுள்ளது. இது தொடர்பாக மாநில விலங்குகள் நலத்துறை கூறுகையில், பரிசோதனை முடிவில் பன்றி காய்ச்சல் உறுதியாகியுள்ளதால், நோய் பரவலை தடுக்க பண்ணைகளில் உள்ள 300 பன்றிகளை கொல்ல உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த பாதிப்பு மற்ற இடங்களுக்கு பரவாமல் தடுக்கவும் அரசு விழிப்புணர்வுடன் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்தியாவில் ஏற்கனவே பீகார், உத்தரப்பிரதேசம், அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்கள் ஆகியவற்றில் இந்த ஆப்ரிக்க பன்றி காய்ச்சல் பாதிப்பு பரவல் ஏற்பட்டுள்ளது. மிக வேகமாக பரவக் கூடிய இந்த தொற்று விலங்களின் உயிரை விரைவாக பறிக்கும் தன்மை கொண்டது.
அசாம் மாநிலத்தில் மட்டும் 2020-22 காலகட்டத்தில் இந்த ஆப்ரிக்க பன்றி காய்ச்சல் பாதிப்பு காரணமாக 40,482 பன்றிகள் உயிரிழந்துள்ளதாக அம்மாநில அமைச்சர் அதுல் போரா தெரிவித்துள்ளார். பண்ணையில் ஒரு பன்றிக்கு இந்த பாதிப்பு வந்தாலும் பரவலை கவனித்து தடுக்காவிட்டால் விரைவில் அனைத்து பன்றிகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டு விடும்.
இதன் காரணமாக வட மாநிலங்களில் இந்த பரவல் தென்பட்ட உடன் நாட்டின் அனைத்து மாநிலங்களும் உஷாராக இருக்கும் படி மத்திய அரசு அலெர்ட் தெரிவித்திருந்தது. ஏற்கனவே, ஓமிக்ரான் தொற்று, மங்கிபாக்ஸ் தொற்று போன்றவற்றால் திணறி வரும் கேரளாவில் தற்போது பன்றி காய்ச்சலும் வந்துள்ளதால் அம்மாநில சுகாதாரத்துறை தொடர் கண்காணிப்பு நிலையில் உள்ளது.