விசித்திரன்’ படத்திற்கு தமிழ் திரைத் துறையில் யாரும் உரிய அங்கீகாரம் கொடுக்கவில்லை” என நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ் கவலை தெரிவித்துள்ளார்.

‘பட்டத்து யானை’ செய்தியாளர் சந்திப்பின்போது பேசிய அவர், “விசித்திரன் திரைப்படம் அனைவராலும் பாராட்டுப் பெற்ற படம். இதுவரைக்கும் கிட்டத்தட்ட 47 இன்டர்நேஷனல் விருது, 20 உள்நாட்டு விருதுகள் படத்திற்கு கிடைத்துள்ளது. அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு படமாக அங்கீகரிக்கப்பட்ட படம் இது. போஜ்பூரி, பாலிவுட், தெலுங்கு என அங்கிருந்தெல்லாம் பெரிய நடிகர்கள் எனக்கு போன் செய்து பாராட்டினார்கள். இன்றைக்கு வரை ஒரு வருத்தம் என்னவென்றால், தமிழிலிருந்து எந்த நடிகரும் என்னைத் தொடர்பு கொண்டு அங்கீகரிக்கவில்லை.

நான் போஜ்பூரியில் நடிக்கிறேன், தெலுங்கில் மகேஷ்பாபுவுடன் நடிக்ககிறேன். கன்னடத்தில், மலையாளத்தில் என மொத்தம் 8 படங்களில் நடிக்கிறேன். தமிழ்ப் படத்திலும் நடிக்கிறேன். என்ன தான் மற்ற படங்களில் நடித்தாலும், தமிழர்கள் என அனைவரையும் ஒன்றிணைத்து விட்டுகொடுக்காமல் அரவணைத்து போக வேண்டும் என்பது தான் என் ஆசை.

பணம் பெரிய வித்தியாசமில்லை. தெலுங்கில் பணம் அதிகமாக தருகிறார்கள். போஜ்பூரி, மலையாளத்தில் பணம் குறைவுதான். இருந்தாலும் கதாபாத்திரத்திற்காக நடிக்கிறேன். மேலும், நடிப்பு உலக அளவில் சென்று சேர வேண்டும் என்பதுதான் நான் நடிக்க காரணம். ஆதலால் அனைவரும் ஒற்றுமையாக இருப்போம்” என்று அவர் பேசினார்.