அதிமுக முன்னாள் அமைச்சருக்கு 4 வார காலம் இடைக்கால ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.3 கோடி வரை மோசடி செய்ததாக கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மற்றும் அவரது உதவியாளர்கள் 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்படிருந்தது. இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் வழங்கக் கோரி ராஜேந்திர பாலாஜி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனைத் தொடர்ந்து அவர் உச்ச நீதிமன்றத்தில் கடந்த மாதம் 18ஆம் தேதி மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்திருந்தார். ஏற்கெனவே இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ராஜேந்திர பாலாஜியைக் கைது செய்யத் தமிழக அரசு இவ்வளவு வேகம் காட்டுவது ஏன் என்று கேள்வி எழுப்பியிருந்தது.

இந்த மனு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ராஜேந்திர பாலாஜி தரப்பில், அரசியல் உள்நோக்கத்துடன் இந்த வழக்கில் சிக்க வைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. அப்போது தமிழக அரசுத் தரப்பில், அவர் மீது ஏராளமான புகார்கள் வந்ததால், நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், தமிழக அரசு வழக்கறிஞரிடம், ராஜேந்திர பாலாஜி தரப்பு வழக்கறிஞர்களை ஏன் துன்புறுத்தினீர்கள் எனக் கேள்வி எழுப்பினர்.

பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ராஜேந்திர பாலாஜிக்கு 4 வார கால இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர். இந்தக் காலகட்டத்தில் அவர் விசாரணை அமைப்புகளின் விசாரணைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும், அவருடைய பாஸ்போர்ட்டை சம்பந்தப்பட்ட குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதியிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர் வசிக்கக்கூடிய விருதுநகர் தவிர்த்த வேறு பகுதிகளுக்குச் செல்லக்கூடாது என்று நிபந்தனைகள் விதித்தும் உத்தரவிட்டனர்.

திருச்சி சிறையில் அடைத்தது ஏன்? இந்த விசாரணையின்போது, ராஜேந்திர பாலாஜியைக் கைது செய்த பின்னர், அருகில் உள்ள மதுரை சிறையில் அடைக்காமல் ஏன் திருச்சி சிறையில் அடைத்தீர்கள் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அப்போது தமிழக அரசுத் தரப்பில், பாதுகாப்புக் காரணங்களுக்காக அவர் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டதாகவும், முக்கிய பிரமுகர்களுக்கான வசதிகளுக்காகத்தான் அங்கு அடைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.