தமிழக அரசு அறிவித்துள்ள பொது விடுமுறை நாட்களில் டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கும் விடுமுறை அளித்து மது விற்பனை இல்லா நாட்களாக அறிவிக்கக் கோரிய மனு வாபஸ் பெறப்பட்டதைத் தொடர்ந்து வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில், தூத்துக்குடியைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் தாக்கல் செய்த மனுவில், ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசின் விடுமுறை நாட்கள் குறித்து தலைமைச் செயலாளர் விடுமுறை நாட்கள் குறித்த அட்டவணையில் உள்ள பொது விடுமுறை நாட்களான புத்தாண்டு, பொங்கல், மாட்டுப் பொங்கல், தைப்பூசம், குடியரசு தினம், மொகரம், பக்ரீத், ரம்ஜான், புனித வெள்ளி, கிறிஸ்துமஸ், தீபாவளி, சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை, சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி, மே தினம், தெலுங்கு வருடப் பிறப்பு, தமிழ் வருடப் பிறப்பு ஆகிய தினங்கள் விடுமுறை தினமாக அறிவிக்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்
அந்த உத்தரவு அனைத்து தமிழக அரசுத் துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள் போன்ற அனைத்து தமிழக அரசு சார்ந்த நிறுவனங்களுக்கும் பொருந்தும் என்று குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு, விடுமுறை விடாமல் விற்பனையை அதிகரிக்கும் முயற்சியில் அரசு ஈடுபடுவதாகக் குறிப்பிட்டுள்ளார். கேரளாவில் ஒவ்வொரு ஆங்கில மாதம் முதல் தேதியன்றும் மது விற்பனை கிடையாது, பெரும்பாலான பண்டிகை தினங்களில் மது விற்பனை கிடையாது. டெல்லி, கொல்கத்தா, மும்பை உள்ளிட்ட பகுதிகளில் அனைத்துப் பண்டிகை நாட்களிலும் மது விற்பனை கிடையாது. பண்டிகைக் காலங்களில் வீட்டில் குடும்பத்தினருடன் கொண்டாடவே விடுமுறை விடப்படுவதாகவும், ஆனால் தமிழகத்தில் பண்டிகை தினத்தில் மது அருந்தி நிறைய விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுகிறது. எனவே, மகிழ்வோடு இருக்க வேண்டிய வீடுகள் துக்க வீடாக மாறுகின்றன.
எனவே தமிழக அரசு அறிவித்துள்ள பொது விடுமுறை நாட்களில் டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கும் விடுமுறை அளித்து மது விற்பனை இல்லா நாட்களாக அறிவிக்க வேண்டும் என மனுவில் கோரியிருந்தார். மேலும் ஜனவரி 14, 15, 16, 18 ஆகிய நாட்களில் கடைகளை மூட அரசுக்கு உத்தரவிட வேண்டுமென்று இடைக்காலக் கோரிக்கையும் வைத்திருந்தார்.
இந்த வழக்கு பொறுப்புத் தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், டாஸ்மாக் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்குச் சட்டப்படிதான் விடுமுறைகள் வரும் என்றும், அரசு பொது விடுமுறை நாட்களில் கட்டுப்படாது எனவும் தெரிவித்தனர்.
மேலும், பொதுநல வழக்குகள் இல்லாமல், வழக்காடிகளுக்காக எத்தனை வழக்கு தாக்கல் செய்திருக்கிறீர்கள் என்றும் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், பார் கவுன்சில் பதிவை ரத்து செய்யவும் உத்தரவிடுவோம் என வழக்கறிஞருக்கு எச்சரிக்கை விடுத்தனர். விளம்பரத்திற்காக வழக்குத் தொடர்ந்துள்ளதால் அபராதத்துடன் வழக்கைத் தள்ளுபடி செய்யப்போவதாகவும் எச்சரித்தனர். இதனையடுத்து வழக்கை வாபஸ் பெறுவதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, வழக்கைத் தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.