அலோபதி முறைப்படி மருத்துவம் பார்த்ததாக ஹோமியோபதி மருத்துவருக்கு எதிரான வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டியில் உள்ள தனியார் ஹோமியோபதி மருத்துவமனையில் வட்டார மருத்துவ அதிகாரி திடீர் சோதனை நடத்தினார். அங்கு அலோபதி முறையில் மருத்துவம் பார்ப்பதாக கொடுத்த புகாரின் அடிப்படையில் மருத்துவர் செந்தில்குமாருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி செந்தில்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதி ஆர்.எம்.டி.டீக்காராமன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், ஆயுர்வேதம், சித்தா மற்றும் யுனானி மருத்துவம் படித்தவர்கள், தாங்கள் படிக்கும்போது பெற்ற பயிற்சியின் அடிப்படையில் அலோபதி மருத்துவமும் பார்க்கலாம். முழுக்க முழுக்க அலோபதி மருத்துவம் செய்யக் கூடாது என்று கடந்த 2010-ம் ஆண்டு தமிழக அரசு பிறப்பித்த சுற்றறிக்கை நீதிபதி கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது.

அந்த சுற்றறிக்கையில், இந்திய மருத்துவமுறை படித்த மருத்துவர்கள், நவீன மருத்துவதையும் பார்ப்பதில் காவல் துறையினர் தலையிடக் கூடாது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த சுற்றறிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதி, மருத்துவர் செந்தில்குமாருக்கு எதிரான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.