வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் கடும் காய்ச்சலால் அவதிப்பட்டதாக அவரது சகோதரி தெரிவித்திருக்கிறார்.

வடகொரியாவில் கடந்த மே மாதம் கரோனா வேகமாக பரவியது. ஒமைக்ரானின் கொரோனா பாதிப்பு அங்கு உறுதி செய்யப்பட்ட நிலையில், அங்கு அவசர நிலை பிறப்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன.

இந்த நிலையில், வடகொரியாவில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருவருக்குக் கூட கரோனா பாதிப்பு ஏற்படாத நிலையில், கரோனாவை வெற்றிகரமாக எதிர்கொண்டு மீண்டுவிட்டதாக அந்நாட்டு அதிபர் கிம் ஜோங் உன் அறிவித்தார்.

இந்தச் சூழலில், கிம் ஜாங் உன்னின் சகோதரி கிம் யோ ஜாங் சமீபத்தில் அளித்த பேட்டி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவர் அந்தப் பேட்டியில், “வடகொரியாவில் கரோனா வைரஸ் பரவலின்போது, அதிபர் கிம் ஜாங் உன் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார். அவர் மக்களைப் பார்த்துகொள்ள வேண்டிய நிலையில் இருந்ததால் ஒரு நிமிடம் கூட ஒய்வு எடுக்கவில்லை

கடந்த சில நாட்களாக தென்கொரியாவிலிருந்து வடகொரியாவுக்கு துண்டு பிரசுரங்கள், பலூன்கள் ஆகியவை பறக்கவிடப்படுகின்றன. இதனால் இங்கு அச்சமான சூழல் நிலவுகிறது. இதனை தென்கொரியா திருத்தி கொள்ளாவிட்டால் அதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும்” என்றார்.

முன்னதாக, கிம்மின் உடல் நிலைக் குறித்து மேற்குலக ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. இந்த நிலையில், தனது சமீபத்திய உரையின் மூலம் இதெற்கெல்லாம் கிம் முற்றுப்புள்ளி வைத்தது குறிப்பிடத்தக்கது.