கூட்டுறவு இயக்கம் இன்று மிகவும் பொருத்தமானது மற்றும் அவை நாட்டின் வளர்ச்சிக்கு நிறைய பங்களிக்க முடியும்

நாட்டின் பொருளாதாரத்தை 5 டிரில்லியனாக உயர்த்துவதில் கூட்டுறவு நிறுவனங்கள் முக்கிய பங்காற்றும் என்று கூட்டுறவு நிறுவனங்களின் முதல் மெகா மாநாட்டில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.

மத்திய கூட்டுறவு அமைச்சகம் இந்த ஆண்டு ஜூலை மாதம் புதிதாக தொடங்கப்பட்ட நிலையில் டெல்லியில் கூட்டுறவு சங்கங்களின் முதல் மாநாட்டினை உள்துறை அமைச்சர் அமித்ஷா துவக்கி வைத்தார். இக்கூட்டத்தில் கூட்டுறவு சங்கங்களைச் சேர்ந்த 2100க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் நேரிடையாகவும், 6 கோடி பேர் ஆன்லைன் வாயிலாகவும் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அடுத்த 5 ஆண்டுகளில் கூட்டுறவு விவசாய சங்கங்களின் எண்ணிக்கை 3 லட்சமாக உயர்த்தப்படும் என கூறினார். தற்போது 65,000 விவசாய கூட்டுறவு சங்கங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது..

கூட்டுறவு துறையை மேம்படுத்த மத்திய அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து இக்கூட்டத்தில் விளக்கமளித்து அமித்ஷா பேசுகையில், “கூட்டுறவு இயக்கத்தை முன் எடுத்துச் செல்ல மாநிலங்களுடன் இணைந்து மத்திய அரசு செயல்படும். கூட்டுறவு அமைச்சகம் உருவாக்கப்பட்டதன் நோக்கமே இத்துறையை நவீனப்படுத்தி, மேம்படுத்துவது தான். இந்திய பொருளாதாரத்தை 5 டிரில்லியன் டாலர்களாக முன்னேற்றுவதில் கூட்டுறவு சங்கங்கள் முக்கிய பங்காற்றும்.

நாம் புதிதாக சிந்திக்க வேண்டும், புதிதாக மேம்படுத்திக் காட்ட வேண்டும், வேலையின் நோக்கத்தை விரிவுபடுத்த வேண்டும் மற்றும் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவர வேண்டும்.

மத்திய அரசு விரைவில் கூட்டுறவு கொள்கையை கொண்டு வந்து, மாநிலங்களுடன் இணக்கமாக பணியாற்றி கூட்டுறவு இயக்கத்தை வலுப்படுத்தும்.

சிலர் ஏன் மத்திய அரசு கூட்டுறவு அமைச்சகத்தை உருவாக்கியது, இது மாநில அரசின் விவகாரம் ஆயிற்றே என பேசுகின்றனர். இதற்கு சட்டரீதியாக பதில் சொல்ல முடியும். ஆனால் நான் அந்த விவாதத்திற்குள் செல்ல விரும்பவில்லை. நாங்கள் மாநிலங்களுடன் இணைந்து பணியாற்றுவோம்.

2002ம் ஆண்டு அப்போதைய பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய், புதிய கூட்டுறவு கொள்கை ஒன்றை கொண்டு வந்தார், ஆனால் தற்போது மோடி அரசாங்கள் ஒரு புதிய கூட்டுறவு கொள்கையை அமல்படுத்தும். வரி விதிப்பு போன்றவற்றில் கூட்டுறவு சங்கங்கள் சில சிரமங்களை சந்தித்து வருகின்றனர் என்பதை அறிவேன், இவை விரைவில் களையப்படும் என உறுதி கூறுகிறேன்” இவ்வாறு அமித்ஷா பேசினார்.