தமிழ்நாடு முழுவதும் இருக்கக்கூடிய ஊரக பகுதிகளில் நமக்கு நாமே திட்டத்தை செயல்படுத்துவதற்கான அதிகாரபூர்வ அரசாணை தமிழக அரசு சார்பில் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் இருக்கக்கூடிய கிராம ஊராட்சி பகுதிகள், பேரூராட்சி பகுதிகளில் மக்கள் பங்களிப்புடன் நமக்கு நமே திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது. மக்களின் சுய சார்பு தன்மையை ஊக்குவிக்கவும், பலப்படுத்தவும், மக்களுக்கு தேவையான திட்டங்களை அவர்களது பங்களிப்புடன் செயல்படுத்தி பொதுச் சொத்துக்களை உருவாக்கி பராமரித்து வருவதே நமக்கு நாமே திட்டத்தின் நோக்கமாகும். இந்நிலையில், தமிழகத்தில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 2021 – 22ம் ஆண்டு நிதியாண்டில் செயல்படுத்தக்கூடிய திட்டங்களுக்காக 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து ஊரக உள்ளாட்சித்துறையானது அரசாணை வெளியிட்டிருக்கிறது.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பாக திமுக ஆட்சி காலத்தில் 2011ம் ஆண்டு இத்திட்டம் தொடங்கப்பட்டது. அதன்பிறகு வந்த அதிமுக ஆட்சியில் இத்திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படாத நிலையில், தற்போது மீண்டும் செயல்படுத்துவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டிருக்கிறது. மேலும் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் எந்தெந்த பணிகள் செயல்படுத்த வேண்டும், அவை எவ்வாறு செயல்படுத்த வேண்டும் என்பது தொடர்பாக ஒரு விரிவான வழிகாட்டு நெறிமுறைகளும் தமிழக அரசால் வெளியிடப்பட்டிருக்கிறது.

மொத்தமுள்ள 100 கோடி ரூபாயில், 50 கோடியானது முதற்கட்டமாக இத்திட்டங்கள் செயல்பாட்டிற்கு வருவதற்கான நடவடிக்கைகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. மீதமுள்ள 50 கோடியானது பணிகள் செயல்பட்டு கொண்டிருக்கும் பட்சத்தில் வெளியிப்பிடப்படும் என்றும் தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. 10 ஆண்டுகளுக்கு பிறகு நமக்கு நாமே திட்டம் ரூ.100 கோடி மதிப்பில் செயல்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.