ஸ்ரீபெரும்புதூர் செயின்ட் கோபைன் நிறுவன வளாகத்தில் ரூ.500 கோடி மதிப்பில் நிறுவப்பட்டுள்ள மிதவை கண்ணாடி பிரிவு, ஒருங்கிணைந்த ஜன்னல் பிரிவு, சிப்காட் நகர்ப்புறவனம் ஆகியவற்றை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கிவைத்தார்.

1998-ல் பெரும்புதூர் தொழில் வளாகத்தில் செயின்ட் கோபைன் நிறுவனத்துக்கு அடிக்கல் நாட்டிவைத்த முன்னாள் முதல்வர் கருணாநிதி 2000-ம் ஆண்டில் உற்பத்தியை தொடங்கிவைத்தார்.

சுமார் 177 ஏக்கரில் அமைந்துள்ள இந்நிறுவனம் ரூ.3,750 கோடி முதலீடு செய்துள்ளது. மேலும், தமிழகம் முழுவதும் ரூ.4,700 கோடி முதலீடு செய்து, நேரடியாக 2 ஆயிரம் பேருக்கும், மறைமுகமாக 2,500 பேருக்கும் வேலைவாய்ப்பு வழங்குகிறது.

இங்கு, முகம்பார்க்கும் கண்ணாடி, சூரிய ஆற்றல் கண்ணாடி, லாக்வேர்டு கண்ணாடி, இன்சுலேட்டட் கண்ணாடி, மேற்பூச்சுள்ள கண்ணாடி, பாதுகாப்பு கண்ணாடி, தீப்பிடிக்காத, குண்டு துளைக்காத, வெடிகுண்டு தாக்குதலை சமாளிக்கும் வகையிலான கண்ணாடிஉள்ளிட்டவை தயாரிக்கப்படுகின்றன. மேலும், மதிப்புக் கூட்டப்பட்ட கண்ணாடிகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

இந்நிலையில், இந்த வளாகத்தில் ரூ.500 கோடி மதிப்பில், 200பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் மிதவை கண்ணாடிப் பிரிவு, ஒருங்கிணைந்த ஜன்னல் பிரிவு மற்றும் நகர்ப்புற வனம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.

இவற்றை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கிவைத்தார். இந்த மிதவைக் கண்ணாடிப் பிரிவுஅதிகபட்ச உற்பத்தி, நவீனத் தொழில்நுட்பம், பிரத்யேக வடிவமைப்பு ஆகிய சிறப்புத் தன்மைகளை உள்ளடக்கியது.

நவீனக் கட்டமைப்புகளுக்கு ஏற்ற கண்ணாடிகள், ஆட்டோமொபைல் துறைக்கேற்ற கண்ணாடிகள் மற்றும் சூரிய உற்பத்திக்கான கண்ணாடிகள் தயாரிக்கப்படும். மேலும், ஒருங்கிணைந்த ஜன்னல் பிரிவு முழுவதும் டிஜிட்டல் மற்றும்தானியங்கி முறையில் செயல்படும். 10 ஆயிரம் சதுரமீட்டர் பரப்பில், ஆண்டுக்கு ஒரு லட்சம் ஜன்னல்களை இந்த ஆண்டு இறுதிக்குள் உற்பத்தி செய்யும் திறனுடன் இந்த ஆலை உருவாக்கப்பட்டுள்ளது.

செயின்ட் கோபைன் சிப்காட் நகர்ப்புற வனம் 3 லட்சம் சதுர அடிபரப்பில், சுமார் 60 ஆயிரம் மரங்கள் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. இது அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட்ட திட்டமாகும். இந்த திட்டம் தமிழக அரசின் பசுமை இலக்கை எட்டுவதற்கும், மாநிலத்தின் பசுமைப் பகுதி அளவை 33 சதவீதமாக உயர்த்தவும் உதவும் என்று இந்நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் தா.மோ.அன்பரசன், டி.ஆர்.பாலு எம்.பி., கு.செல்வப்பெருந்தகை எம்எல்ஏ, தொழில் துறைச் செயலர் எஸ்.கிருஷ்ணன், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் எம்.ஆர்த்தி, செயின்ட் கோபைன் நிறுவன தலைமை செயல் அலுவலர் பெனாய்ட் பாசின், ஆசிய-பசிபிக் தலைமை செயல் அலுவலர் பி.சந்தானம், பிரான்ஸ் தூதர் லிசி டாயு உள்ளிட்டேர் பங்கேற்றனர்.