“பூமியில முதல்ல பொண்ணு மட்டும்தான் இருந்தாளாம்… அவளே தனியாக உசுர உருவாக்கி, பிரசவிச்சு, சந்ததி வளர்த்தாளாம். ஒருத்தியா இருந்தா அவள சுலபமா அழிச்சுரலாம். அதனால துணைக்கு ஒரு ஆள உருவாக்கி, உசுருல பாதிய அந்த துணைகிட்ட கொடுக்கணும்னு இயற்கை யோசிச்சுதாம். அப்படிதான் ஆம்பளை வந்தான்… சரி, ஒரு உசுர ரெண்டா பிரிச்சு ஆளுக்கு பாதியா கொடுத்தாச்சு, பிரச்சினை தீர்ந்ததுனு யோசிக்கும்போது புதுசா வந்தது இன்னொரு பிரச்சினை. ரெண்டு பேர்ல யாரு உசுரக் கொடுக்குறது, யாரு உசுர தாங்குறதுனு கேள்வி வந்துச்சு..!

பொம்பளைக்கு துணையா வந்த ஆம்பள, ஒரு உசுர உள்ள வச்சு தாங்கி, பாதுகாத்து பெத்தெடுக்க எனக்கு பொறுமை பத்தாது, நான் உசுர கொடுக்குற ஆளாவே இருந்துக்குறேன். ஏற்கெனவே உயிரு வளர்த்த பொம்பளையே பிள்ளை பெத்துக்கட்டும். நான் சாகுற வர அவங்க ரெண்டு பேரையும் பாத்துக்கறேனு சொல்லிட்டான். பொழப்பு கெட்ட ஆம்பள அன்னைக்கு எடுத்த அந்த முடிவால அதுக்கப்புறம் வாழ்நாள் முழுசும் ஒரு ஆம்பளையோட அன்பை வெளிப்படுத்த முடியாமலே போயிடுச்சு. அப்படியே அன்பைக் காமிச்சாலும் அது வேலிக்கு பாய்ச்சுன தண்ணீயாவும் போச்சு.

உன் அப்பனும் அந்தப் பொழுப்பு கெட்ட ஆம்பள மாதிரிதா(ன்)ய்யா. அவன் பாசத்தை புரிஞ்சுக்கணும்னா, நீயும் ஒரு அப்பனா மாறணும். நீ அப்பனாகும்போது உனக்கு அது புரியும் ராசா…”

– ‘ஏன் அப்பத்தா அப்பாவுக்கு என்மேல பாசமே இல்ல. நான் வேற வீட்டுல பிறந்து தவுட்டுக்கு என்னை வாங்கிட்டு வந்துட்டாங்களா?’னு சின்ன வயசுல நான் கேட்ட கேள்விக்கு என் அப்பாவைப் பெற்றவள் மேற்கண்ட கதையை எனக்குச் சொன்னாள்.

 

 

உண்மையில் அப்பாக்களைப் புரிந்துகொள்வதற்கு எல்லோரும் அப்பாக்களாக மாறத்தான் வேண்டும் போல. தாய்மைக்கும் அதன் பாடுகளைத் தூக்கிப்பிடிக்க பிரசவ வலி, தொப்புள் கொடி உறவு, தலைக் கொள்ளி என ஆயிரம் விஷயங்கள் இருக்க, அப்பாக்களுக்கு அவர்கள் குறித்த எதிர்மறை பிம்பங்களைத் தவிர வேறு ஏதும் இருப்பதாய் தெரியவில்லை.

தலைமுறைகளுக்கு இடையில் இருக்கும் கா லமாற்றம் அப்பாக்களை பிள்ளைகளிடமிருந்து கொஞ்சம் தள்ளியே வைத்து விடுகிறது. இது இப்படி இருக்க, கண்ணுக்கெட்டிய தூரம் வரையுள்ள தலைமுறைகளில் பழமையிலும் புதுமையிலும் ஒரு சேர வாழக்கிடைத்த 90ஸ் கிட்களே கொடுத்து வைத்தவர்கள் என்று ஒரு நாஸ்டால்ஜி இங்கே உண்டு. அது ஒருவகையில் உண்மை என்றே வைத்தும் கொள்ளலாம். ஆனால், சுவரில்லாமல் சித்திரம் வரைய முடியாது இல்லையா? சிம் கார்டு இல்லாமல் செல்போன் வேலைசெய்யாது இல்லையா?

காட்ஸ் கிஃப்டாக தங்களைச் சொல்லிக்கொள்ளும் அந்த 90ஸ் கிட்களை வழிநடத்திய(?) அப்பாக்கள் எப்படி இருந்தார்கள்..? தேன் சுவை சுளைகளை மறைத்துவைத்து முள்முகம் காட்டித் திரிந்த அவர்களை கண்முன்னே நிறுத்துகிறது சமகாலத்துக்கு சற்றே முந்தைய இரண்டு திரைப்படங்கள். முதல் படம் சுசி கணேசனின் இயக்கத்தில் 2002-ஆம் ஆண்டு வெளியான ‘5 ஸ்டார்’. இரண்டாவது படம் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான ‘7ஜி ரெயின்போ காலனி’.

கிராமத்து ‘5 ஸ்டார்’அப்பா: இமை மூடித்திறக்கும் நொடிப்பொழுது மாற்றங்களுடன் புதிய நூற்றாண்டில் கால் பதிக்கத் தயாராகிக் கொண்டிருந்தது இந்தியா. காலமாற்றத்தின் அந்த வேகத்துக்கு ஈடுகொடுக்க தயாராகிக்கொண்டிருந்த புதிய தலைமுறைகளின் முதுகில் சிறகு முளைக்கச் செய்தன பொறியியல் படிப்புகள். புற்றீசல் போல எனச் சொன்னாலும் ஒரு தலைமுறையின் வேகமான பாய்ச்சலுக்கு அது வடிகாலாய் இருந்தது நிதர்சனமே.

அப்படியான ஒரு பொறியியல் கல்லூரியில் இரண்டு பெண்கள், மூன்று ஆண்கள் என 5 நண்பர்கள் குழாமில் ஒருவனாய் கனவுகள் சுமந்து திரிகிறான் இளங்கோ. கிராமத்தில் இருந்து பட்டணத்துக்கு படிக்க வந்தவன். எல்லாவற்றிக்கும் கொஞ்சம் பயந்த சுபாவம் கொண்டவன். பட்டாம்பூச்சிகளாய் பறந்து திரியும் அந்த நண்பர்களுக்கு கேம்பஸ் இன்டர்வியூவில் ஒரே நிறுவனத்தில் வேலை கிடைக்க, அவர்கள் ஆடிப்பாடிக் கொண்டாடுகிறார்கள்.

அந்தக் கொண்டாட்டத்தின் முடிவில் இளங்கோவை ஒரு ஓங்குதாங்கான முரட்டு மீசை கொண்ட ஆள் வந்து இழுத்துப் போகிறார். அவர் இளங்கோவின் அப்பா. இங்கிருந்து தொடங்குகிறது. பையன் நன்றாக படிக்க வேண்டும் என்பதற்காக தனது சாந்தமான முகத்தை மறைத்து வைத்து சிங்க முகம் காட்டிய இளங்கோ Vs அப்பாவின் ப்ளாஷ் பேக். அந்த அப்பா அப்படி இழுத்துப் போனது கூட வேலை கிடைத்த மகன் தனது கைவிட்டு போய்விடக் கூடாது என்று இளங்கோவின் சம்மதம் இல்லாமல் கல்யாணம் பண்ணி வைக்கத்தான்.

கல்யாண கலாட்டா கதைகளை நண்பர்களிடம் கூறி வேலைக்காக வேறு ஊர் கேட்டு வாங்கிப் பிரியும் நண்பனை சொந்த ஊருக்கு ரயில் ஏற்றிவிடுகிறது நண்பர்கள் குழாம். ஆறு ஆண்டுகள் கழித்து தற்செயல் சந்திப்பில் இளங்கோவின் மனைவியை சந்தித்து இளங்கோ வீடு திரும்பவில்லை என்றறிந்து மீண்டும் அவனைத் தேடித் திரிகிறது நண்பர்கள் குழாம். அதன் ஒரு பகுதியாக இளங்கோவின் கிராமத்துக்கு அந்த முரட்டு அப்பாவைத் தேடிப் போகிறது.

இவர்கள் சந்தித்துக்கொள்ளும் காட்சி அழகான காட்சிக் கவிதை. பறவைக் கோணத்தில் விரியும் காட்சியில் புதிய நூற்றாண்டில் நடைபழகும் இளைய தலைமுறை ஒருபுறம் எதிரில் அவர்களை வழியனுப்பிவிட்டு விரல்களை விட்டுவிடாத தகப்பனின் பிரதிநிதி மறுபுறம். காட்சியிலும் பசுமை செழித்திருக்கும் பசுமை ஒருபுறம். முதல் உழவு முடிந்திருக்கும் பொட்டல் வயல் மறுபுறம் என இருக்கும்.

இந்த இடத்தில் அந்த அப்பா பேசும் வசனங்கள் வரலாற்றுச் சித்திரம். “எதுக்கு தம்பி பொய்… மூர்க்கபையன் கோவக்காரனு சொல்லி திட்டினானு சொல்லுங்க நம்புறேன். ஒருவகையில அதுதான உண்மை. இப்பலாம் நான் நாயைக் கூட திட்டுறது இல்லை.

உண்மையச் சொல்லுங்க. அவன் உயிரோட இருக்கானு நம்புறீங்களா? நான் நம்பலை. நான் பார்க்காத குறியா, கோடாங்கியா எதுக்கும் தட்டுப்படலையே…

பாசத்தை உள்ள வச்சிட்டு பாசாங்கு பண்ணுற மாதிரி கோபத்தைக் காட்டினேன். அதுக்குப் போய்…” என உடைந்து அழுதது இளங்கோவின் அப்பா மட்டும் இல்லை. ஏதோ ஒரு வகையில் 90-ஸ் கிட்களைத் தவறி தடுமாறவிட்டு மீட்டெடுக்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் எல்லா அப்பாக்களும்தான்.

நடுத்தர வர்க்கத்து ‘7ஜி ரெயின்போ காலனி’அப்பா: அடுத்தது அதே புதிய நூற்றாண்டுக்கு நடைபழகி பொறியியல் கனவுகளுடன் சுற்றித் திரிந்த நடுத்தர வர்க்கத்து நகரத்து இளைய தலைமுறை. அதே மூர்க்கமான முசுடு அப்பா. களம் மட்டும் புறாக் கூண்டு அப்பார்ட்மென்டுகள். நடுத்தர வர்க்கத்து தற்குறித்தனத்துடன் சுற்றித் திரியும் இளைஞன் கதிர். தனக்கு பின் குடும்பத்தை கைதூக்கி விடுவான் என்ற நம்பிக்கையில் ஒற்றை ஆளாய் குடும்பத்தை தாங்கி நடத்தும் மிடில்கிளாஸ் அப்பா. சமூகம் அவர் முன் விரித்துப் போட்டிருக்கும் அச்சங்களை எல்லாம் கோபமாய் தன் மகனிடம் காட்டிக் கொண்டிருக்கிறார்.

அந்த அதீத அச்சம், மகனின் ஒவ்வொரு செயலுக்கும் தேளாய் கொட்டிக்கொண்டே இருக்கிறார். மகனுக்கு மட்டும் தண்டச் சோறு ஸ்பெஷலாக வரும் ஆப்லேட்டை புரிந்துகொள்ள முடிந்த அப்பா, மகன் சிகரெட் பிடிக்கிறான் என்பதை அறிந்து பக்குவம் தவறி “அந்த முக்கு கடையில புஃப்பூ… புஃப்பூனு ஊதுறலாடா அது புகை இல்லடா உன் அப்பாவோட ரத்தம்” என பொங்கி விடுகிறார்.

அப்பா மீதான கோபம் அவரின் முகத்தில் கரியைப் பூச வேண்டும் என்ற வெறி காதலியின் கரம் பற்றி ஹீரோ ஹோண்டா கம்பெனியில் வேலையில் சேருகிறான் கதிர். வேலை கிடைத்த விஷயத்தை அப்பாவிடம் சொல்ல “மெக்கானிக்காதான் போவனு சொல்லியிருந்தா நாலு வருஷம் இஞ்சினியர் படிச்சு நேரத்தையும் துட்டையும் வீணாக்கிருக்க வேண்டாம்ல” என வார்த்தையில் அனல் கக்குவார் அப்பா.

அடுத்தக் காட்சி தமிழ் சினிமாவின் ஆகச் சிறந்த அப்பா – மகன் உறவுக்காட்சிகளில் ஆல் டைம் இடம்பிடிக்கும் தகுதி வாய்ந்த ஒன்று. புறாக்கூண்டு வீட்டில் இருக்கும் அம்மாவுக்கும் அ்ப்பாவுக்குமான தலையணை மந்திர அந்தரங்கத் தருணம். மகனின் அப்பாயின்ட்மென்ட் ஆர்டரை கையில் வைத்துப் பார்த்துக்கொண்டிருக்கும் கணவனிடம் மனைவி கேட்பாள்… “மனசுக்குள்ள இவ்வளவு ஆசை இருக்குக்குல்ல, கொஞ்சம் பாசமாதான் பேசிட்டா என்ன?”.

“அடிப்போடி பைத்தியம்… இப்பா நான் பேசுனா அப்பா பணத்துக்காக பேசுறானு நினைச்சுக்கா மாட்டானா. நான் எப்பவும் அவனுக்கு வேண்டாத அப்பாதான். இப்பவும் அப்படியே இருந்துக்கிறேன். இனி அவன் பொழைச்சுப்பான்…” என்பார்.

அதற்கு மனைவி “பெருமையைப் பாரு… வந்து தூங்குங்க” என்பாள். பதிலாய் “என் புள்ளை ஹோண்டா கம்பெனியில வேலை பார்க்க போறான்டீ… நான் பெருமைப் படாம வேற யாரு பெருமை படுவா நீ படுடீ… எனக்கு தூக்கம் வராது…” என்று வலது கையை தலைக்கு அண்டை கொடுத்து விட்டம் பார்த்து மகனுக்காக கனவு காணத் தொடங்குவார்.

இதையெல்லாம் பக்கத்து அறையில் இருந்து கேட்டுக் கொண்டிருக்கும் கதிர் தன் அப்பாவின் பலாச்சுளை பாசம் அறிந்து வாய்ப்பொத்தி கதறுவான். அது கதிரின் கதறல் மட்டும் இல்லை. தலைமுறை இடைவெளியை புரிந்து கொண்ட பின் அப்பாவை தொலைத்து விட்டதாய் உணரும் மகன்களின் தீரா அன்பு நதி!

எவ்வளவுதான் நம் ஆறாம் அறிவை நீட்டிப் போட்டு யோசித்தாலும் சுதந்திரந்திரத்துக்கு முந்தைய 10 ஆண்டுகள் வரை மட்டும் தான் நம்மால் காலத்தை கற்பனை செய்து பார்க்க முடியும். அதனை மீறி கால எந்திர பயணம் என நாம் பேசினாலும் நிகழ்காலத்தின் நிறைய சாயல்கள் அதில் வந்து கொண்டே இருக்கும்.

இந்தச் சூழ்நிலையில், சுதந்திர காலத்து அப்பாக்களுக்கு புதிய வாழ்க்கையை அனுபவிக்க வேண்டிய தேவை மட்டுமே இருந்தது. அதற்கு அடுத்து வந்த அப்பாக்களுக்கு மாற்றங்களை உள்வாங்க கால அவகாசம் இருந்தது. அதனால், அவர்கள் எல்லோரும் நிதானமாய் விழுமியங்களை மகன்களுக்கு கடத்தி அக்மார்க் அப்பாக்களாய் மிளிர்ந்தார்கள்.

ஆனால் 90ஸ் கிட் அப்பாக்களுக்கு அந்த வாய்ப்பு இல்லை. முதுகுக்கு பின்னால் அவரின் அப்பா சொல்லிக்கொடுத்த விழுமியங்கள்… முகத்தில் முன்னால் மகனோடு வாழப்போகும் புதிய நூற்றாண்டு. இதைக் கையாளுவதில் இந்த அப்பாக்கள் கொஞ்சம் தடுமாறத்தான் செய்தார்கள். அதனால், அவர்கள் மகன்களை தோளில் ஏற்றிவைத்து அவர்கள் பார்த்த உலகத்தைவிட புதிய உலகத்தைக் காட்டினார்கள். என்றாலும் மகன் தோள் ஏறி தாவிக் குதித்தோட தயக்கம் காட்டி அவனின் பாதத்தை கெட்டியாக பிடித்துக்கொண்டார்கள்.

காலம் கலைத்துப்போட்டு ஆடிய இந்த ஆட்டத்தில் அப்பாக்களை புரிந்து கொண்டவர்கள் கால ஓட்டத்தில் பிழைத்துக் கொண்டார்கள் கண்ணீர் உதிர்த்த கதிரைப் போல. புரிந்துகொள்ள முடியாதவர்கள் அப்பாக்களை தொலைத்துவிட்டு காலத்தில் கரைந்து போனார்கள் இளங்கோவைப் போல. ஆனாலும் “நீ ஒட்டு நைட்டீஸ் பா… நாங்க புள்ளீங்கோ…” என தலைமுறை இடைவெளியை வைத்து விளையாடும் காலம் தன் ஆட்டத்தை 2கே கிட்ஸ் வரை நீட்டித்திருக்கிறது.

அப்பாக்களை புரிந்துகொள்ள நீங்கள் அப்பாக்களாய் மாற வேண்டும்!

பின்குறிப்பு – கால ஒற்றுமை: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள இரண்டு படங்களிலும் 90ஸ் கிட்ஸ் அப்பாக்களின் இரண்டு பரிமாணங்களை ஏற்று நடித்திருந்தது நடிகர் விஜயன். இந்த இரண்டு இயக்குநர்களுக்கும் இந்தப் படங்கள் அவர்களின் இரண்டாவது படம். 5 ஸ்டார் பிரசன்னா உள்ளிட்டோருக்கு முதல் படம். 7 ஜி ரெயின்போ காலனி ரவி கிருஷ்ணா, சோனியா அகர்வாலுக்கு முதல் படம். இந்த இரண்டு படங்களில் நடித்தவர்களும் தமிழ் சினிமாவில் சொல்லிக்கொள்ளும்படி பெரிய அளவில் சோபிக்கவில்லை என்பது தமிழ் சினிமா சொல்லும் நகைமுரண்.

இன்று – ஜூன் 18, 2023 – தந்தையர் தினம்