கடந்த மே மாதம் ஆட்சி மாறியதிலிருந்து, பல நம்பிக்கை தரும் காரியங்கள் நடந்தபடி இருக்கின்றன. ‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்’ என்ற பிரகடனத்திலிருந்து போலிப் பெருமைகள் வேண்டாம், புத்தகங்களைப் பரிசளியுங்கள் என்றதும், பெருந்தொற்றைக் கட்டுக்குள் கொண்டுவருவதிலிருந்து, பேரிடரில் களத்தில் நிற்பது, தகுதியானவர்களைத் தேவையான துறைகளில் பங்கேற்கச் செய்தது வரை அரசு அதிகாரம் மக்களோடு பயணிப்பது நம்பிக்கையூட்டுகிறது. மக்களின் இந்த நம்பிக்கை, வளமான எதிர்காலத்தைச் சாத்தியமாக்க வேண்டுமென்றால், பணியமர்த்தப்பட்ட துறைசார் வல்லுநர்களின் செயல்பாடுகள், வெளிச்சத்துக்கு வந்து, ஆய்வுகளின் பரிந்துரைகள் உடனுக்குடன் செயல்பாட்டுக்கு வர வேண்டும்.

வளமான தமிழகம் என்பது, ஒரு கை ஓசையான அரசின் நிர்வாகம் மட்டுமல்ல. மாறாக, அது மக்களையும் இணைத்துக்கொண்ட செயல்பாடுகளினாலேயே சாத்தியமாகும். விவசாயம், கைவினைப் பொருள் உற்பத்தி, ஆலை உற்பத்தி, மீன் பிடித்தல், கட்டுமானம், வியாபாரம், சரக்குப் போக்குவரத்து என அனைத்துத் துறைகளிலும் பணியாற்றும் நாட்டு மக்கள், தத்தமது தொழில்களைத் தொடர்ந்து சரிவர நடத்துவதற்கான ஊக்கமும் ஆதரவும் அரசிடமிருந்து வர வேண்டும். ஆட்சியாளர்களின் களஆய்வு தேவை.

ஆனால், அதுவே வாடிக்கையாகிவிடும்போது அரசு இயந்திரம் செயல்படாமல், துதிபாடும் கூட்டமாக மாறி, மக்களை முகம் சுளிக்கச் செய்துவிடுகிறது. வழக்கமான செலவினங்களும் எதிர்பாராத நிவாரணங்களும் புதிய அரசைத் தடுமாறச் செய்திருக்கின்றன. வழக்கமான வரிவிதிப்புகள், நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவராதபோது, மாற்றுவழிகள் கண்டறியப்படுவது அத்தியாவசியத் தேவையாகிறது.

நிலம் என்பது சிக்கலானது; ஆனால், கடலோ திறந்த பெரும் வெளி. பழவேற்காட்டில் தொடங்கி, தென்மேற்கில் வளைந்து கிடக்கும் கடற்கரையும், கடலோடிகளும் தமிழ்நாட்டின் வரப்பிரசாதம். நாம் இன்றும் நினைவில் வைத்துப் போற்றும் சோழர்களின் பொற்காலம், கடலாதிக்கத்தின் மேன்மையை ஆட்சியாளர்கள் உணர்ந்திருந்ததாலேயே. கடலோரப் பொருளாதாரம் என்பது மீன் பிடித்தலும் கப்பலோட்டமும் இணைந்தது. இரண்டையும் ஒன்றுக்கொன்று எதிரானதாக்கிவிட்டோம். உண்மையில், இரண்டும் ஒன்றையொன்று சார்ந்தவை; ஒருசேரப் பயணிப்பவை. கடலோடிகள் என்ற சமூகத்தின் சிறுதொழிலே மீன் பிடித்தல், இன்று அவர்களைக் குறுக்கி மீனவர்களாக்கிவிட்டோம்.

“ஒரு நாட்டின் மக்கள்தொகை அல்ல, மாறாக அந்த நாட்டின் கடலோடிகளின் எண்ணிக்கையும் தொழில் ஆர்வமுமே நாட்டைச் செழுமையானதாக்கும்” என்று உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய ‘வரலாற்றின் மீது கடலாதிக்கத்தின் செல்வாக்கு’ என்ற புத்தகத்தை எழுதிய ஆல்பிரெட் டி மாஹன் கூறினார். காலனியாதிக்கர்களுக்காகச் சொல்லப்பட்டதாக இருந்தாலும்கூட, நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தில், கடலாதிக்கத்தின் முக்கியத்துவத்தைக் கட்டியம்கூறி நின்றது இவ்வாக்கியம்.

கடலாதிக்கத்தின் காரணகர்த்தாக்களான கடலோடிகள், இன்னும் தமிழ்நாட்டுக் கடற்கரையில் இருக்கிறார்கள். கைதவறிப்போன வரலாற்றுப் பொருளாதார வளமையை அவர்கள் மூலம் உறுதியாக மீட்டெடுக்க முடியும். 1997-ல் உருவாக்கப்பட்டுப் பெரிதும் அறியப்படாத துறையாகத் தமிழக அரசில் நீடிக்கும் ‘தமிழ்நாடு கடல்சார் வாரியம்’ கடலோரப் பொருளாதார முன்னேற்றத்தில் பெரும் பங்காற்ற முடியும்.

சாலைகளில் நாளும் பெருகும் நெரிசல், நேர்முக மறைமுகப் பிரச்சினைகளுக்குக் காரணமாகிவிடுகிறது. அதற்கான மாற்று வழிகளுள் ஒன்று, கடல்வழிப் பாதையைப் பயன்படுத்துவது. தொலைநோக்குப் பார்வையற்ற திட்டங்களால், பெருந்துறைமுகமான சென்னை உட்பட நாட்டின் சிறு துறைமுகங்கள்கூட குடியேற்றங்களால் சாலைகள் அடைபட்டுக் கிடக்கின்றன. சரக்குப் போக்குவரத்தில் ஏற்படும் தடையும், தாமதமும் பெரும் பொருளாதார இழப்புக்குக் காரணமாகிவிடுகின்றன.

இந்த நிலை மாற வேண்டுமானால், தமிழ்நாட்டின் கடல்வழிப் பாதைகள் பயன்பாட்டுக்கு வர வேண்டும். சிறு துறைமுகங்களிலிருந்து சென்னை போன்ற பெருந்துறைமுகங்களுக்குச் சிறிய கப்பல்களை விடலாம். கரைக்கடல் கப்பலோட்டம் நடந்தால், சாலைகளில் நெருக்கடி குறைந்து, விபத்துகள் தவிர்க்கப்படும், எரிபொருள் சிக்கனமாகும், காற்றின் மாசு குறையும். தொடரும் சிக்கல்களுக்கான அக்கறையான தீர்வொன்று, அரசின் வருமானத்துக்கும், பெரும் பொருளாதார முன்னேற்றத்துக்கும், நேர்முக மறைமுக வேலைவாய்ப்புகளுக்கும் காரணமாய் அமையுமென்றால், ஆவன செய்ய வேண்டியது அரசின் கடமையன்றோ!

– ஆர்.என்.ஜோ டி குருஸ், ‘கொற்கை’ உள்ளிட்ட நாவல்களின் ஆசிரியர்.

தொடர்புக்கு: rnjoedcruz@gmail.com