அரியலூர் மாவட்டத்தில் ஏரிகள் மீட்சி, சோழர்கால ஆட்சி எனும் தலைப்பில் சோழர்கால பாசன திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி, 2 நாட்கள் நடைபயணத்தை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று (அக்.29) கீழப்பழுவூரில் தொடங்கினார்.

கீழப்பழுவூர் புதிய பேருந்து. நிலையத்தில் நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சியில் அன்புமணி பேசுகையில், “சோழர்கால பாசன திட்டத்தை அரசு செயல்படுத்தினால், அரியலூர் மாவட்டத்தில் எங்கு போர்வெல் அமைத்தாலும் 50 அடியில் நல்ல குடிநீர் கிடைக்கும். விவசாயமும் செழிக்கும். மாவட்டத்தின் பெரிய ஏரிகளான செம்பியன்மாதேவி பேரேரி, பொன்னேரி என 10-க்கும் மேற்பட்ட பெரிய ஏரிகள் உள்ளன. 100-க்கும் மேற்பட்ட சிறிய ஏரிகள் உள்ளன.

இவை அனைத்தையும் அரசு தூர்வார வேண்டும். பாசன வாய்க்கால்களை தூர்வார வேண்டும். கொள்ளிடம் ஆற்றில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் தடுப்பணைகள் கட்ட வேண்டும். தடுப்பணைகள் கட்டப்பட்டிருந்தால் தற்போது கொள்ளிடத்தின் வழியாக கடலில் கலந்த உபரி வெள்ளநீர் சேமிக்கப்பட்டிருக்கும்” என்றார்.

இன்றும், நாளையும் நடைப்பயணம் மேற்கொள்ளும் அன்புமணி ராமதாஸ், கரைவெட்டி பறவைகள் சரணாலயம் பெரிய ஏரி, கண்டராதித்தம் செம்பியன் மாதேவி பேரேரி, காமரசவல்லி சுக்கிரன் ஏரி, கங்கைகொண்ட சோம்புரம் பொன்னேரி என பல்வேறு பாசன ஏரிகளையும், அந்தந்தப் பகுதி விவசாய சங்க பிரதிநிதிகள், வணிகர் சங்க பிரதநிதிகள் மற்றும் பொது மக்களையும் சந்திக்கிறார்.

இந்த நடைப்பயணத்தை திருவையாறு இசைக் கல்லூரி முன்னாள் முதல்வர் கவுசல்யா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.வணிக சங்கங்களின் பேரமைப்பு மாவட்ட செயலாளர் அக்பர் ஷெரிப், காவேரி டெல்டா பாசன கூட்டு விவசாய சங்கங்களின் மாவட்ட செயலாளர் தூத்தூர் தங்க.தர்மராஜன், கொள்ளிடம் கீழணை விவசாய சங்கங்களின் தலைவர் விநாயகமூர்த்தி, பாமக மாநில பொருளாளர் திலகபாமா, மாநில செய்தி தொடர்பாளர் வினோபாவா, மாநில சமூக நீதிப் பேரவை தலைவர் வழக்கறிஞர் கே.பாலு, உழவர் பேரியக்க மாநில தலைவர் ஆலயமணி, அரியலூர் மாவட்ட செயலாளர் காடுவெட்டி ரவி, பெரம்பலூர் மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், அரியலூர் மாவட்டத் தலைவர் சின்னதுரை உள்ளிட்ட ஏராளமான பாட்டாளி மக்கள் கட்சியினர் மற்றும் வன்னியர் சங்கத்தினர் கலந்து கொண்டனர்