பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆளுநரை சந்தித்து  திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு “DMK Files” என்ற பெயரில் திமுக அமைச்சர்கள் மற்றும் எம்பிக்களின் சொத்துப் பட்டியலை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். இதற்கு திமுக தரப்பில் கடும் விமர்சனங்கள் எழுந்தன. இதனைத் தொடர்ந்து திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

கடந்த ஜூலை 14ம் தேதி திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தொடர்ந்த அவதூறு வழக்கில் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை  ஆஜராகினார்.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியதாவது:

“ சைதாப்பேட்டை  நீதிமன்றத்தில் டி.ஆர். பாலு தொடந்த அவதூறு வழக்கில் ஆஜரானேன். Dmkfiles ஏப்ரல் 14 தேதி வெளியிட்டேன். திமுகவின் தரப்பில்  1000 கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருந்தார்கள்.

ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் அனைவரும் எங்களுடன் இணைய வேண்டும்; தமிழ்நாட்டில் முதல் தலைமுறைக்கும் 3ம் தலைமுறைக்கும் யுத்தம் நடைபெறுகிறது; DMK FILES  பாகம் 2-ல் அதிமுகவில் இருந்து திமுக சென்ற அமைச்சர்கள் தான் அதிகம். அதனை விரைவில் வெளியிட உள்ளேன்” என தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இன்று பிற்பகல் 3 மணிக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பின்போது திமுக அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளின் இரண்டாவது பட்டியலை வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.