தஞ்சாவூர் அருகே பள்ளி மாணவி தற்கொலை வழக்கில், மதமாற்றம் தொடர்பாக மாணவி பேசியதாக பதிவு செய்யப்பட்ட வீடியோவை பதிவு செய்தவர் வல்லம் டிஎஸ்பி முன்பு இன்று காலை ஆஜராகி மொபைல் போனை ஒப்படைக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே மைக்கேல்பட்டியில் உள்ள தூய இருதய மேல்நிலைப் பள்ளி விடுதியில் தங்கி பிளஸ் 2 படித்து வந்த மாணவி தற்கொலை செய்து கொண்டார். அந்த மாணவியை விடுதியை சுத்தம் செய்ய வற்புறுத்தியதாக வார்டன் சகாயமேரி (62) கைது செய்யப்பட்டார்.

இதனிடையே அந்த மாணவி தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது, எடுத்ததாகக் கூறப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. அதில், தன்னை கிறிஸ்தவ மதத்துக்கு மாறுமாறு கட்டாயப்படுத்தியதாக மாணவி கூறியதால் சர்ச்சை எழுந்தது. மாணவி தற்கொலை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றக்கோரி அவரது தந்தை முருகானந்தம் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது முருகானந்தம், அவரது மனைவி ஆகியோர் தஞ்சாவூர் 3-வது நீதித்துறை நடுவரிடம் அளித்த ரகசிய வாக்குமூலம் நீதிபதியிடம் வழங்கப்பட்டது. பின்னர் அரசு வழக்கறிஞர் வாதிடும்போது, மாணவி சிகிச்சையில் இருந்தபோது எடுத்ததாகக் கூறப்படும் வீடியோவின் உண்மைத் தன்மையை ஆய்வு செய்ய வேண்டி உள்ளது. இந்த வழக்கில் அறிக்கை தாக்கல் செய்ய ஒரு வாரம் அவகாசம் வேண்டும் என்றார்.

இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு: மனுதாரரின் மகள் இறப்பதற்கு முன்பு எடுத்ததாகக் கூறப்படும் வீடியோ பதிவில், ‘தன்னை கிறிஸ்தவ மதத்துக்கு மாறுமாறு கட்டாயப்படுத்தியதாக’ கூறியுள்ளார். அந்த வீடியோவில் இடம் பெற்றிருப்பது மாணவியின் உண்மையான குரலா? வீடியோ உண்மையானதா? என்பதை தடயவியல் பரிசோதனை மூலம் உறுதிப்படுத்த வேண்டி உள்ளது.

தடயவியல் சோதனை

இதனால் மாணவியின் வீடியோவை பதிவு செய்த முத்துவேல், இன்று காலை 10 மணிக்கு வல்லம் முகாம் அலுவலகத்தில் டிஎஸ்பி பிருந்தா முன்பு ஆஜராகி, வீடியோ எடுத்த மொபைல் போனை தர வேண்டும். அந்த மொபைல் போன், மனுதாரர் தரப்பில் அளிக்கப்பட்ட சிடியை டிஎஸ்பி பிருந்தா, சென்னையில் உள்ள தடயவியல் பரிசோதனை மையத்துக்கு உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும்.

தடயவியல் மைய இயக்குநர், மொபைல் போன், சிடியை ஆய்வு செய்து அவற்றின் உண்மைத் தன்மை குறித்து நீதிமன்றத்துக்கு அறிக்கை அளிக்க வேண்டும். மாணவியின் உடற்கூராய்வு அறிக்கையை தஞ்சாவூர் தடயவியல் மைய அலுவலர் ஜன. 27-ல் தாக்கல் செய்ய வேண்டும். மனுதாரரும், அவர் மனைவியும் இன்று காலை டிஎஸ்பி முன்பு விசாரணைக்கு ஆஜராக வேண்டும். வழக்கு மீண்டும் ஜன.28-ல் விசாரிக்கப்படும். இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.