இந்தியாவில் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவிருக்கும் 50 ஒவர் ஐசிசி உலகக்கோப்பைத் தொடருக்கான இந்திய அணியில் விக்கெட் கீப்பிங் நிலைக்கு யாரைத் தேர்வு செய்வது என்பது சிக்கல் நிறைந்தது என்பதோடு, மிகவும் செயல் தந்திரமிக்க முடிவாகவும் உள்ளதால் அணித் தேர்வுக்குழுவுக்கு கடினமான பணி காத்திருக்கிறது.

ரிஷப் பந்த் விபத்தில் உயிர் மீண்டு காயத்துக்கு சிகிச்சைபெற்று வருவதால் எழுந்த இந்தத் திடீர் பிரச்சினை காரணமாக டெஸ்ட் போட்டிகளில் கே.எஸ்.பரத்தை முயற்சி செய்து அவரது கீப்பிங், பேட்டிங் இரண்டுமே பெரிதாக யாரையும் கவராமல் போய் விட்டது. ரிஷப் பந்துக்கு அடுத்த கவர்ச்சிகர தெரிவு சாத்தியம், இஷான் கிஷன் மற்றும் சஞ்சு சாம்சன் இடையே போட்டியாக எழுந்துள்ளது.

கே.எல்.ராகுல் காயத்திலிருந்து மீண்டு நல்ல உடற்தகுதி பெற்று விட்டால் அவரையே உலகக் கோப்பைக்கு விக்கெட் கீப்பராக ஆடச் செய்து ஒரு ரிசர்வ் கீப்பராக சஞ்சுவையோ, இஷான் கிஷனையோ அணியில் தேர்வு செய்ய வாய்ப்புள்ளது. ராகுல் திராவிட் இந்தியாவுக்காக 2003 உலகக்கோப்பையில் விக்கெட் கீப்பிங் செய்தபோது கூடுதல் பவுலரோ அல்லது பேட்டரோ அணிக்குள் எடுக்கும் வாய்ப்பு பிரகாசமாக இருந்தது. அந்த வகையில் கே.எல்.ராகுல் விக்கெட் கீப்பிங் செய்ய முடிகிறதென்றால், அது கூடுதல் நன்மையாகப் பார்க்கப்படும்.

கே.எல்.ராகுல் உடற்தகுதி பெற்றாலும் அவரை, உலகக் கோப்பை போன்ற பணிச்சுமை மிகுந்த ஒரு தொடரில் காயத்திலிருந்து வந்தவுடனேயே விக்கெட் கீப்பர்/பேட்டர் என்ற இரட்டைச் சுமையை ஏற்ற மாட்டார்கள் என்றே தெரிகிறது. ஆகவே, இப்போது உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சனுக்கும், இஷான் கிஷனுக்கும் இடையில்தான் கடும் போட்டி நிலவுகின்றது. இதில் இஷான் கிஷனைத்தான் கோச், கேப்டன், அணித் தேர்வுக்குழு, மும்பை இந்தியன்ஸ் ஸ்பான்சர்கள் உள்ளிட்டவர்கள் விருப்பத் தெரிவாக இருப்பார் என்று ஒரு கருத்து நிலவுகின்றது.

இஷான் கிஷன் விக்கெட் கீப்பிங் உயர்ந்த தரத்துக்கு இல்லை என்பது அறிந்த நிரந்தரமே. கேட்சுகளை விடுகிறார். பந்துகளை சரியாக சேகரிக்கத் தவறுகிறார். மேலும் பேட்டிங்கில் வங்கதேசத்துக்கு எதிராக அடித்த அதிவேக இரட்டைச் சதம் தாண்டி அவரது மற்ற ஸ்கோர்கள் ஆரோக்கியமானதாக இல்லை. அதுவும் இந்தியாவில் இஷான் கிஷன் ஆடிய 8 போட்டிகளில் 184 ரன்களையே அவர் எடுத்திருக்கிறார்.

மாறாக, சஞ்சு சாம்சனின் விக்கெட் கீப்பிங்கும் பேட்டிங் ரெக்கார்டும் ஓரளவுக்கு நன்றாகவே உள்ளன. இந்தியாவில் அவர் ஆடிய 10 இன்னிங்ஸ்களில் 330 ரன்களை 104 என்ற ஆரோக்கியமான ஸ்ட்ரைக் ரேட்டில், 66 என்ற பிரமாதமான சராசரியில் எடுத்துள்ளார். மேலும் சஞ்சு சாம்சனை 4-ம் நிலை முதல் 6,7 நிலை வரை இறக்கலாம். வேகப்பந்து, ஸ்பின் இரண்டையும் மைதானம் நெடுக அடிக்கும் திறமை வாய்ந்தவர்.

மேலும், ஜிம்பாப்வேவுக்கு எதிரான தொடரில் சாம்சன், இஷான் கிஷன் இருவருமே அணியில் இருந்தாலும் சஞ்சுவிடம்தான் கீப்பிங் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. எனவே சஞ்சுதான் உலகக் கோப்பைக்கு இந்திய அணித் தேர்வுக் குழுவின் நியாயமான தேர்வாக இருக்க முடியும். ஆனால், அதையும் தாண்டி இந்திய கோச், கேப்டனின் ஃபேன்சி முடிவாக இருந்தால் இஷான் கிஷன் வாய்ப்பு பெறுவார்.

ஆனால், கே.எல்.ராகுல் ஃபிட் ஆகிவிட்டார் என்பதற்காக அவரை விக்கெட் கீப்பிங் செய்யச் சொல்வது பெரிய சிக்கலைத் தோற்றுவிக்கலாம். ஒரு ஸ்பெஷலிஸ்ட் கீப்பர் தேவை அதற்கு சஞ்சு சாம்சனே சிறந்தவர் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் கருதுகின்றனர்.