இலவசங்கள் தொடர்பாக பாஜக, ஆம் ஆத்மி கட்சி தலைவர்களிடையே வார்த்தை போர் 2-வது நாளாக நடைபெற்றது. இலவசங்கள் மக்களுக்கு நீண்ட கால வளர்ச்சிக்கு உதவாது என்று பாஜக தெரிவித்துள்ளது.

ஹரியானா மாநிலம் பானிபட்டில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, சுயநலம் கொண்ட இலவச அறிவிப்புகள் நாடு தன்னிறைவு பெறுவதற்கு தடையாக இருக்கும் என்றும் வரி செலுத்துவோருக்கு மேலும் சுமையாக இருக்கும் என்றும் கூறியிருந்தார். இதுகுறித்து பேசிய டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கோடீஸ்வரர்களுக்கு கடன் தள்ளுபடி செய்யும் மத்திய அரசு, ஏழைகள் மீது வரிச்சுமையை ஏற்றுவதாக சாடியிருந்தார். இலவசங்களை ஒழிப்போம் என்பது சாமானிய மக்களுக்கு எதிரான அறிவிப்பு என்றும், இலவச கல்வி, மருத்துவ வசதியை அடிப்படை உரிமையாக கருத வேண்டுமே தவிர இலவச அறிவிப்பாகக் கூறக்கூடாது என்றும் தெரிவித்திருந்தார்.

அரவிந்த் கெஜிர்வாலின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து இதுவரை எந்த ஒரு அரசும், கல்வி மற்றும் மருத்துவம் அளிப்பதை, இலவச அறிவிப்பாக கூறியதில்லை என்று கூறியுள்ளார். ஆனால் அரவிந்த் கெஜ்ரிவால் ஏழை, எளிய மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாக குற்றம்சாட்டினார்.

இந்த விவாதங்கள் ஒரு புறம் நடந்துக்கொண்டிருக்க, டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா, மோடியின் நண்பர்களுக்கு கோடிக்கணக்காக மதிப்பிலான கடன்கள் தள்ளுபடி செய்யப்படுவதாகவும் ஏழை மக்களுக்கு அளிக்கப்படும் சலுகைகளை பாஜகவினர் கொச்சைப்படுத்துவதாகவும் கூறினார்.

அரவிந்த் கெஜ்ரிவால் இலவச மின்சாரம் வழங்குவதாக குஜராத் உள்ளிட்ட பல மாநில தேர்தல்களில் வாக்குறுதி கொடுத்து வரும் நிலையில், டெல்லியில் அதனை நிறைவேற்றினாரா என்று மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி கேள்வியெழுப்பியுள்ளார்.டெல்லி அரசு பள்ளிகளை சிறப்பாக நடத்தி வந்தால், ஆம் ஆத்மி எம்எல்ஏக்களின் குழந்தைகள் ஏன் அங்கு படிப்பதில்லை என்றும் அவர் வினவியுள்ளார்.

இலவச அறிவிப்புகள் மூலமாகவே அரவிந்த் கெஜ்ரிவால் தலைவரானதாகவும், ஆத் ஆத்ம் கட்சி ஆட்சிக்கு வந்ததாகவும் கூறியுள்ள பாஜக செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா, இவையனைத்தும் குறுகிய கால பலன்கள் என்று விமர்சித்துள்ளார். டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் 2 மாணவர்களுக்கு 20 லட்சம் ரூபாய் மட்டுமே கடன் வழங்கப்பட்டதாகவும், இதனை விளம்பரப்படுத்த 19 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.