மாஸ்கோ: ரஷ்யாவின் லூனா-25 விண்கலம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நிலவில் விழுந்து நொறுங்கியதாக ரஷ்ய விண்வெளி ஆய்வு நிறுவனமான ரோஸ்காஸ்மோஸ் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

ரஷ்யாவின் விண்வெளி நிறுவனமான ராஸ்காமோஸ், வோஸ்டோக்னி காஸ்மோட்ரோம் ஏவுதளத்திலிருந்து லூனா-25 என்ற விண்கலத்தை சோயுஸ் 2.1பி ராக்கெட் மூலம் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தியது. 47 ஆண்டுகளுக்குப் பிறகு ரஷ்யா சார்பில் முதல் முறையாக நிலவுக்கு அனுப்பப்பட்ட விண்கலம் இதுவே. இந்த விண்கலம் இஸ்ரோவின் சந்திரயான்-3 விண்கலத்துக்கு முன்பாகவே நிலவின் தென் துருவத்தில் இறங்கும் என்று சொல்லப்பட்டது.

இந்த நிலையில், கடைசி நேரத்தில் கட்டுப்பாடற்ற சுற்றுப்பாதையில் சிக்கியதால் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக லூனா-25 விண்கலம் நிலவில் மேற்பரப்பின் மோதி நொறுங்கியதாக ராஸ்காமோஸ் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், இந்த விபத்துக்கான காரணங்கள் குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும், என்னவிதமான தொழில்நுட்ப சிக்கல்கள் ஏற்பட்டன என்பது குறித்து விவரங்கள் எதுவும் தெரியவில்லை என்றும் ராஸ்காமோஸ் தெரிவித்துள்ளது.

நோக்கம் என்ன? – முன்னதாக, லூனா-25 செலுத்தப்பட்டதன் நோக்கம் குறித்து ரஷ்யாவின் விண்வெளி விஞ்ஞானி விட்டலி இகோரோவ் கூறும்போது, “நிலவில் தண்ணீர் உள்ளதா என ஆய்வு செய்ய வேண்டும் என்பது விஞ்ஞானிகளின் நோக்கமாக இருக்கலாம். ஆனால் அதிபர் புதினைப் பொருத்தவரை நிலவை ஆய்வு செய்ய வேண்டும் என்பது இலக்கு அல்ல. விண்வெளி ஆய்வில் சிறந்து விளங்குவதாக சீனாவும் அமெரிக்காவும் கூறிக்கொள்கின்றன. வேறு சில நாடுகளும் இந்த சாதனையை எட்ட முயற்சிக்கின்றன. எனவேதான் ரஷ்யா இந்த விண்கலத்தை அனுப்பி உள்ளது. இதன்மூலம் சோவியத் யூனியனின் நிபுணத்துவத்தை மீட்க வேண்டும் என்பதுதான் நோக்கம்” என்றது குறிப்பிடத்தக்கது.