அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த ஊரான பெரியகுளத்திலும், அவர் வாக்களித்த வார்டிலும் அதிமுக தோல்வி அடைந்தது.

தேனி மாவட்டம், பெரியகுளம் ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த ஊர் ஆகும். அதிமுகவில் சாதாரண தொண்டனாக இருந்து முதல்வர் வரை கட்சியில் உயர்ந்த நிலைக்குச் செல்ல பெரியகுளம் அடித்தளமாக இருந்துள்ளது.

இந்நிலையில் பெரியகுளம் நகராட்சியில் அதிமுக தோல்வி அடைந்துள்ளது. மொத்தம் 30 வார்டுகளில் 8 இடங்களையே அதிமுக கைப்பற்றி உள்ளது. மீதமுள்ள இடங்களில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள், சுயேச்சைகள் வெற்றி பெற்றன. ஓ.பன்னீர்செல்வம் மற்றும் குடும்பத்தினர் 21-வது வார்டில் வாக்களித்தனர். இந்த வார்டிலும் திமுக வேட்பாளர் சந்தான லட்சுமி வெற்றிபெற்றார். தேனி மாவட்டத்தின் 6 நகராட்சிகளையும் திமுகவே கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.