“ஒவ்வொரு ஆண்டும் கிரிக்கெட்டில் உனது தரத்தை உயர்த்திக் கொண்டு வரும் நீ, ஏற்கெனவே இதில் நிறைய சாதித்துவிட்டாய்” என்று இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியை பாராட்டியுள்ளார் முன்னாள் வீரர் யுவராஜ் சிங்.

இந்திய கிரிக்கெட்டில் வெளியில் தெரியாத நல்ல நண்பர்கள் யுவராஜ் சிங் மற்றும் விராட் கோலி இருவரும். இவர்கள் இணைந்து பல போட்டிகளில் விளையாடியுள்ளனர். இந்நிலையில், விராட் கோலி கேப்டன் பொறுப்பை துறந்து புதிய அத்தியாயத்தில் கால் பதித்துள்ளதை அடுத்து, அவருக்கு முன்னாள் வீரர் யுவராஜ் சிங் பரிசு ஒன்றை அனுப்பி, அத்துடன் உருக்கமாக கடிதம் ஒன்றையும் எழுதி அனுப்பியுள்ளார்.

அந்த கடிதத்தில், “விராட், ஒரு கிரிக்கெட் வீரராகவும், ஒரு மனிதராகவும் உன்னுடைய வளர்ச்சியை அருகில் இருந்து நான் பார்த்துள்ளேன். ஒரு இளம் பையனாக வலை பயிற்சியில் இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான்களுடன் தோளோடு தோள் நின்றதில் இருந்து இப்போது ஒரு புதிய தலைமுறைக்கு வழிகாட்டும் ஒரு ஜாம்பவானாக உருவெடுத்துள்ளாய். களத்தில் நீ காட்டும் ஒழுக்கமும், ஆர்வமும், விளையாட்டின் மீதான அர்ப்பணிப்பும், இந்த நாட்டில் உள்ள ஒவ்வொரு குழந்தையையும் கிரிக்கெட் மட்டையை எடுக்க வைத்துள்ளதுடன், அவர்களுக்குள் ஒரு நாள் நீல நிற ஜெர்சியை அணிய வேண்டும் என்ற கனவைத் தூண்டியுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் கிரிக்கெட்டில் உனது தரத்தை உயர்த்தி கொண்டு வரும் நீ, ஏற்கெனவே இதில் நிறைய சாதித்துவிட்டாய். நீ ஒரு லெஜண்ட்ரி கேப்டன் மட்டுமல்ல அற்புதமான தலைவரும்கூட. இப்போது வாழ்க்கையில் நீ புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளது என்னை மேலும் உற்சாகப்படுத்தியுள்ளது. ஏனென்றால், இனி உன்னிடம் இருந்து வழக்கமான ரன் சேஸை எதிர்பார்க்கிறேன். ஒரு சக வீரராகவும், ஒரு நண்பராகவும் உன்னுடன் நிறைய நினைவுகளைப் பகிர்ந்துகொண்டதில் பெருமைப்படுகிறேன்.

பார்ட்னர்ஷிப் போட்டு ரன்கள் சேர்ப்பது, உணவை ஏமாற்றி சாப்பிடுவது, பஞ்சாபி பாடல்களுக்கு இசைத்து நடனமாடுவது மற்றும் கோப்பைகளை வெல்வது என அனைத்தையும் நாம் ஒன்றாகவே செய்துள்ளோம். நீ எனக்கு எப்போதும் Cheeku-வாகவும், உலகிற்கு கிங் கோலியாகவும் இருப்பாய். உன்னுள் இருக்கும் நெருப்பு எப்பொழுதும் எரித்துக்கொண்டே இருக்கட்டும். நீ ஒரு சூப்பர் ஸ்டார். தொடர்ந்து நாட்டை பெருமைப்படுத்து!” என்று உருக்கமாக கூறி கோலிக்கு கோல்டன் ஷு ஒன்றை பரிசாக அனுப்பியுள்ளார் யுவராஜ் சிங்.