சென்னை: சென்னையில் இன்று முதல் ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் போட்டி நடைபெறவுள்ளது. நுங்கம்பாக்கத்திலுள்ள எஸ்டிஏடி டென்னிஸ் மைதானத்தில் இந்த போட்டி வரும் 19-ம் தேதி வரை தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் (டிஎன்டிஏ) ஆதரவுடன் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியின் முதல்நிலை வீரராக சீன தைபேயைச் சேர்ந்த 21 வயதான சென் சியூன் ஹிசின் உள்ளார். அவர் உலக டென்னிஸ் வீரர்கள் தரவரிசையில் 115-வது இடத்தில் உள்ளார்.

போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.1.06 கோடியாகும். சாம்பியன் பட்டம் வெல்லும் வீரருக்கு ரூ.14.47 லட்சமும், 100 ஏடிபி ரேங்கிங் புள்ளிகளும் கிடைக்கும். இந்தப் போட்டியில் ஸ்வீடனைச் சேர்ந்த முன்னாள் டென்னிஸ் வீரர் ஜான் போர்க்கின் மகன் லியோ போர்க் விளையாடவுள்ளார்.

இதுதொடர்பாக நேற்று செய்தியாளர்களிடம் ஜான் போர்க் பேசியதாவது: என்னுடைய மகன் இங்கு டென்னிஸ் விளையாடுவது மகிழ்ச்சி. நாங்கள் டென்னிஸ் விளையாடிய காலத்தில் வீரர்களுக்கு பெரிய அளவில் பாதுகாப்பு இல்லை. எங்கு சென்றாலும் என்னை சூழ்ந்துகொண்டனர். இதனால் என்னால் டென்னிஸில் கவனம் செலுத்த முடியாமல் மிகக் குறைந்த வயதிலேயே (26 வயது) ஓய்வு பெற்றேன். இவ்வாறு அவர் கூறினார்.