சென்னை: பொதுப் போக்குவரத்தை வலுப்படுத்த வலியுறுத்தி தமிழகம் முழுவதும் விழிப்புணர்வு மாரத்தான் நடத்தப்பட்டது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் (சிஐடியு), பூவுலகின் நண்பர்கள், திராவிடர்கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் பொதுப்போக்குவரத்தை பாதுகாப்பதற்கான விழிப்புணர்வு மாரத்தான் நேற்று நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் 22 இடங்களில் நடைபெற்ற மாரத்தானை அந்தந்த பகுதியைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள் தொடங்கி வைத்தனர்.

சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் நடைபெற்ற மாரத்தானில்சுமார் 1,500 பேர் கலந்துகொண்டனர். ஆண்களுக்கான ஓட்டத்தை சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் தொடங்கி வைத்தார். மாரத்தானில் பங்கேற்றவர்களுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வாழ்த்து தெரிவித்தார்.

போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கி சவுந்தரராஜன் பேசியதாவது: தனி வாகனங்களின் எண்ணிக்கை உயர்வு, சாலைகள் அமைப்பதை வைத்துவளர்ச்சி என்கின்றனர். வாகன பெருக்கத்தை நாட்டின் வளர்ச்சிஎன்று கூறுவது இயற்கைக்கு மாறானது. எவ்வளவு அகலமான சாலைகள் போட்டாலும், சில ஆண்டுகளில் நெரிசல் அதிகரிக்கும்.

வாகனங்கள் கட்டுக்குள் இருக்க வேண்டும் என்றால், பொதுப் போக்குவரத்தை அதிகரிக்க வேண்டும். அதை மக்கள்பயன்படுத்துவதற்கு வசதியானதாக மாற்ற வேண்டும். இதை அரசுகள் செய்ய வேண்டும்.போர்மரணங்களைவிட மிக அதிகமாகசாலை போக்குவரத்தில் மரணம்நிகழ்கிறது. வாகன பெருக்கத்தால், தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் நுரையீரல் புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இவற்றைத் தடுக்க சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும்.

இந்தியாவில் பிற மாநிலங்களோடு ஒப்பிடும்போது தமிழகத்தில் பொதுப் போக்குவரத்து வலுவாக உள்ளது. இருப்பினும் அதை மேலும் வலுப்படுத்த வேண்டும். சுற்றுச்சூழலை பாதுகாக்க, விபத்துகளை தவிர்த்திட, நெரிசலை குறைத்திட வேண்டுமென்றால் பொதுப் போக்குவரத்து வலுப்பட வேண்டும். பணக்காரர்களும் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துவதுதான் உண்மையான வளர்ச்சி. இவ்வாறு அவர் பேசினார்.