கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தை இன்று தொடங்கிவைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.

சேலம் மாவட்டம் வாழப்பாடி பேரூராட்சி அரசினர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் தொடங்கி வைக்கப்பட உள்ளது. முதல்வர் ஸ்டாலின் காலை 10 மணிக்கு முகாம்களை தொடங்கிவைக்கிறார்.

இந்த முகாம்களில் 16 சிறப்பு மருத்துவர்களால் மக்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு, கூடுதல் சிகிச்சைக்காக உயர் மருத்துவமனைகளுக்கு பரிந்துரைக்கப்படும். இத்திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் ஆண்டுதோறும் 1,240 மாபெரும் மருத்துவ முகாம்கள் நடத்தப்படும்.

அண்மையில் நடந்து முடிந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் 110 அறிவிப்புகள் மருத்துவத் துறையின் சார்பில் வெளியிடப்பட்டது. அந்த அறிவிப்புகளில் மிகவும் பிரதானமான திட்டம் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டமாகும்.

இத்திட்டம் 2006ஆம் ஆண்டு டிசம்பர் 30ஆம் தேதி அப்போதைய முதல்வர் கருணாநிதியால் பூவிருந்தவல்லி அண்ணா ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

2011-க்குப் பிறகு அதிமுக ஆட்சியாளர்களால் இத்திட்டம் சரியாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. கடந்த 10 ஆண்டுகளாக எந்தச் செயல்பாடும் இல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில் தான், கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தை இன்று தொடங்கிவைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.