கர்நாடகாவின் புதிய முதல்வராக பசவராஜ் பொம்மை (61) இன்று பதவியேற்றார்.

கர்நாடக முதல்வராக இருந்த பி.எஸ்.எடியூரப்பாவுக்கு 78 வயது நிறைவடைந்ததால் பாஜக மேலிட உத்தரவின்பேரில் நேற்று முன்தினம் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து அஷ்வத் நாராயண், லட்சுமண் சவதி, பசவராஜ் பொம்மை, சி.டி.ரவி உள்ளிட்டோர் பதவியை கைப்பற்றுவதற்கான காய் நகர்த்தல்களில் ஈடுபட்டனர்.

இதைத் தொடர்ந்து பாஜக மேலிடம் புதிய முதல்வரை தேர்ந்தெடுப்பதற்காக மத்திய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான், ஜி.கிஷன் ரெட்டி, கர்நாடக மேலிட பொறுப்பாளர் அருண் சிங் ஆகியோரை பெங்களூருவுக்கு அனுப்பியது. பெங்களூருவில் உள்ள நட்சத்திர விடுதியில் நேற்று மாலை 7.30 மணிக்கு தர்மேந்திர பிரதான் தலைமையில் பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் தொடங்கியது. இதில் முன்னாள் முதல்வர்கள் எடியூரப்பா, ஜெகதீஷ் ஷெட்டர், பாஜக அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த கூட்டம் தொடங்கியதும் மூத்த எம்எல்ஏக்கள், எடியூரப்பா அமைச்சரவையில் சட்டம் மற்றும் உள்துறை அமைச்சராக இருந்த பசவராஜ் பொம்மையின் பெயரை முதல்வராக முன்மொழிந்தனர். இதை பெரும்பான்மை எம்எல்ஏக்களும், மூத்த தலைவர்களும் ஏற்றுக் கொள்வதாக அறிவித்தனர். இதையடுத்து கர்நாடகாவின் புதிய முதல்வராக பசவராஜ் பொம்மை ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டதாக தர்மேந்திர பிரதான் அறிவித்தார்.

கூட்டம் தொடங்கிய 10 நிமிடங்களில் பசவராஜ் பொம்மை முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். 15 நிமிடங்களில் கூட்டம் நிறைவு பெற்றது.

பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் புதிய முதல்வராக பசவராஜ் பொம்மை தேர்வு செய்யப்பட்டதும் ஆளுநர் தாவர் சந்த் கெலாட்டை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். இதை ஏற்றுக் கொண்ட ஆளுநர், ஆட்சியமைக்க அழைப்புவிடுத்தார்.

இதன்படி இன்று காலை 11 மணிக்கு ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற எளிய விழாவில் கர்நாடகாவின் புதிய முதல்வராக பசவராஜ் பொம்மை பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் தாவர் சந்த் கெலாட் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.