தமிழகத்தில் சனிக்கிழமை தோறும் மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெறுவதைப் போல இனி வியாழக்கிழமை தோறும் பூஸ்டர் தடுப்பூசிக்கான சிறப்பு முகாம்கள் நடைபெறும் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை சைதாப்பேட்டையில் இல்லம் தேடி கூடுதல் தடுப்பூசி செலுத்தும் பணியை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஒவ்வொரு வாரமும், சனிக்கிழமைகள் தோறும் மெகா தடுப்பூசி செலுத்தும் முகாம்கள் நடைபெறுகிறுது. சுமார் 50 ஆயிரம் இடங்களில் வாரம் தோறும் இந்த மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

இனிமேல் ஒவ்வொரு வியாழக்கிழமை தோறும் பூஸ்டர் தடுப்பூசி போடுவதற்கென்று, சிறப்பு முகாம்கள் நடத்தப்படவிருக்கிறது. ஒட்டுமொத்தமாக 600 இடங்களில் பூஸ்டர் தடுப்பூசிக்கென்று சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது.

ஜனவரி மாத இறுதிக்குள் தமிழகத்தில் 10 லட்சம் பேர் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள தகுதிபெறுவார்கள். பொங்கல் பண்டிகைக்குப் பிறகான கரோனா பாதிப்பு இன்னும் இரண்டு நாள்களுக்குப் பின்னர் தெரியவரும். பொதுமக்கள், கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.