‘பொன்னியின் செல்வன்’ படத்தில் ஐஸ்வர்யா ராயின் கதாபாத்திரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘பொன்னியின் செல்வன்’. இப்படத்தில், ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, த்ரிஷா, சரத்குமார், ரியாஸ் கான், பிரபு, ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். லைகா நிறுவனம் வழங்க, மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான், ஒளிப்பதிவாளராக ரவிவர்மன், கலை இயக்குநராக தோட்டா தரணி, எடிட்டராக ஸ்ரீகர் பிரசாத் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். அடுத்த ஆண்டு வெளியாகவுள்ள இப்படத்தின் டைட்டில் போஸ்டர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியாகி வரவேற்பைப் பெற்றது.
இப்படத்தில் யார் யாருக்கு என்னென்ன கதாபாத்திரம் என்பது குறித்துப் படக்குழு ரகசியம் காத்து வருகிறது. படம் தொடர்பான புகைப்படங்கள் கூட இதுவரை வெளியாகவில்லை.
இந்நிலையில் ‘சேதுபதி’, ‘மாரி 2’ உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ராகவன் முருகன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஐஸ்வர்யா ராயுடன் தான் எடுத்த செல்ஃபிக்களைப் பகிர்ந்துள்ளார். அதில் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் ஐஸ்வர்யா ராய் நந்தினி தேவி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருவதாகவும், தான் பாண்டிய இளவரசனாக நடித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்தப் படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகின்றன.