சென்னை: “தமிழகத்தில் கடந்த ஓராண்டில் மட்டும் ரூ.9.19 கோடி மதிப்புள்ள 152.36 டன் குட்கா பரிமுதல் செய்யப்பட்டுள்ளது” என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற போதை ஒழிப்பு தின உறுதி மொழியேற்பு நிகழ்ச்சியை சைதாப்பேட்டை மாந்தோப்பு பள்ளியில் உள்ள மாணவிகள் எல்இடி திரையில் பார்த்தனர். இதில் மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டார். மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறும்போது, “போதைப் பொருட்கள் இல்லாத தமிழகம் என்ற வகையில் வெற்றிகரமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதில் சுகாதாரத் துறை, காவல்துறை, பள்ளிக் கல்வி, உயர்கல்வித் துறை, சமூக நலத்துறை உள்ளிட்ட துறைகள் இணைந்து போதைத் தடுப்பு பணில் ஈடுபட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த 2013-ம் ஆண்டு முதல் போதைப் பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளது. இதில் கடந்த 2013-ம் ஆண்டு முதல் இந்தாண்டு ஜூன் வரையில் ரூ.39 கோடி மதிப்பிலான 952 டன் குட்கா கைப்பற்றப்பட்டுள்ளது. இதில், ரூ.9.19 கோடி மதிப்பிலான 152.36 டன் குட்கா கடந்த ஓராண்டில் மட்டும் கைப்பற்றப்பட்டுள்ளது.

குற்றவியல் வழக்குகள் கடந்த 9ஆண்டுகளில் 686 பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில், கடந்த ஓராண்டில் மட்டும் 104 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மொத்த தண்டனை பெற்றவர்களில், கடந்த 9 ஆண்டுகளில் 119 பேரும், கடந்த ஓராண்டில் மட்டும் 29 பேரும் தண்டனை பெற்றுள்ளனர். கடந்த 9 ஆண்டுகளில் ரூ. 21.91 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. ஆனால் கடந்த ஓராண்டில் ரூ7.28 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

உரிமையியல் வழக்குகள் என கடந்த 9 ஆண்டுகளில் 107 வழக்குகளும், ஓராண்டில் 11 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு, 96 பேர் தண்டனை பெற்றுள்ளனர். 9 ஓண்டுகளில் 75 கடைகளுக்கும், கடந்த ஓராண்டில் 44 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இளைஞர்களை மீட்கவும், போதை இல்லாத தமிழகத்தை உருவாக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதில் மிகப்பெரிய வெற்றி கிடைக்கும்.

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் உள்ள ஆர்எம்ஓ, ஏஆர்எம்ஓ ஆகியோர் இடையே பணிப்போர் கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. மருத்துவம் படித்த மகத்தான மருத்துவ பணியில் உள்ள மருத்துவர்கள் மாறி மாறி குறை கூறி, அரசிடம் புகார் அளிக்காமல், சமூக வலைதளங்களில் குறை கூறுகின்றனர். இது தனது கவனத்திற்கு வந்ததால் இருவரையும் வேறு இடங்களுக்கு மாற்றம் செய்துள்ளனர். இது குறித்து விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

போதைப் பழக்கத்தை ஒழித்தால் சமூக விரோத போக்கும் குறையும். புதிய புதிய போதை பொருட்களை அறிவியல் பூர்வமாக கண்டுபிடித்து வருகின்றனர். இதனை சுகாதாரத்துறை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கும்.தடை செய்யப்பட்ட மருந்துகளை விற்பனை செய்வதை தடுக்க வேண்டும். அதனை உறுதி செய்ய வேண்டும் என உணவு பாதுகாப்பு துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்று அவர் கூறினார்.