உலக அளவில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று வாட்ஸ்அப் தளம் முடங்கியது. அதனால் அந்த தளத்தில் பயனர்களால் தொடர்பு மேற்கொள்ள முடியாமல் தவித்தனர். இந்த நிலையில், வாட்ஸ்அப் முடக்கத்திற்கான காரணம் குறித்து அதன் தாய் நிறுவனமான மெட்டா வசம் இந்திய அரசு விளக்கம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் தரப்பில் மெட்டாவை தொடர்பு கொண்டுள்ளது.

வாட்ஸ்அப் மெசேஞ்சரை உலக அளவில் சுமார் 200 கோடி பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். டெக்ஸ்ட் மெசேஜ், போட்டோ, வீடியோ, ஆடியோ மற்றும் அழைப்புகளை மேற்கொள்ள பயன்படுத்தப்பட்டு வருகிறது இந்தத் தளம். பள்ளிக்கூடம் தொடங்கி அலுவலகம் வரையில் இப்போது குழுக்களாக ஒருவருக்கு ஒருவர், ஒருவருக்கு பலர் என இதன் மூலம் தகவல்களை பரிமாறிக் கொண்டு வருகின்றனர்.

கடந்த செவ்வாய் சுமார் 2 மணி நேரம் வாட்ஸ்அப் தளம் முடங்கியது. அந்த நேரத்தில் பயனர்களால் மெசேஜ் அனுப்ப, வாய்ஸ் மற்றும் வீடியோ அழைப்புகள் மேற்கொள்ள முடியவில்லை. அதோடு வாட்ஸ்அப் வெப் மற்றும் வாட்ஸ்அப் செயலியை பயனர்களால் பயன்படுத்த முடியவில்லை எனவும் சொல்லப்பட்டது.

“இந்த முடக்கத்திற்கு காரணம் என்ன என விளக்கம் கேட்டுள்ளோம். உள் கட்டமைப்பில் ஏற்பட்ட காரணிகளா அல்லது சைபர் தாக்குதல் காரணமாக என கேட்டுள்ளோம். அடுத்த சில நாட்களில் அவர்கள் தகுந்த விளக்கம் கொடுப்பார்கள் என தெரிகிறது” என அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக, தங்கள் தரப்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறுதான் இந்த முடக்கத்திற்கு காரணம் என மெட்டா நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.