இந்தியா முழுவதும் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் நியாய விலைக் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு உணவுப் பொருள்கள் விநியோகம் செய்யப்படுகின்றன. ஒரு குடும்பத்தின் தினசரி வருவாய், வாழ்விடம் உள்ளிட்ட காரணிகளை அடிப்படையாகக் கொண்டு, வறுமைக்கோட்டுக்கு மேல், கீழ் என்ற வகையில் மக்கள் வகைப்படுத்தப்பட்டனர். நகர்ப்புற, கிராமப்புறங்களில் வாழும் எண்ணற்ற மக்களின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்வதில், நியாய விலைக் கடைகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
நியாய விலைக் கடைகளில் மாதந்தோறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் வழங்கப்படும் அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை உள்ளிட்ட பொருள்கள் விளிம்புநிலை சமூகங்களைச் சேர்ந்த மக்களுக்கு அத்தியாவசிய வாழ்வாதாரமாக இருந்து வருகிறது. அதேபோல நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த மாத ஊதியதாரர்களின் குடும்பங்களைச் சேர்ந்தவர்களும், நியாய விலைக் கடைகளில் கிடைக்கும் பொருள்களை வாங்கிப் பயன்படுத்தாமல் இருப்பது இல்லை. மனிதர்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் முக்கியப் பங்காற்றும் நியாய விலைக் கடைகள் தமிழ்நாட்டின் அரசியல் களத்திலும் இன்றியமையாத இடத்தைப் பிடித்துள்ளது.
காரணம், நியாய விலைக் கடைகளில் வழங்கப்படும் பொருள்களில் ஏதாவது குறை இருப்பதாகக் கூறி, எங்காவது மக்கள் போராட்டம் நடத்தினால் போதும், சம்பந்தப்பட்ட கடையில் ஆய்வு நடத்தி தரமான பொருள்களை விநியோகிக்க எந்தக் கட்சியாக இருந்தாலும் விரைவாக நடவடிக்கை எடுக்கும். காரணம் ஒரு அரசு அதன் திட்டத்தின் மூலம் வாக்களித்த மக்களை நேரடியாகச் சந்திக்கும் இடமாக அவை இருப்பதால்தான். எனவே இங்கு விநியோகிக்கப்படும் பொருள்கள் மற்றும் அதன் தரத்தின் மூலம் எடை பார்க்கப்படுவது அரிசி, சர்க்கரை, கோதுமை மட்டுமல்ல, ஆட்சியாளர்களையும்தான். எனவே நியாய விலைக் கடைகள் தேர்தலின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் வல்லமை கொண்டவை என்றால் மிகையாகாது.
கடந்த ஜனவரி 5ஆம் தேதி வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி, தமிழ்நாட்டில் 6 கோடியே 36 லட்சத்து 25 ஆயிரத்து 813 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 2 கோடியே 13 லட்சத்து 80 ஆயிரத்து 112 பேரிடம் குடும்ப அட்டைகள் உள்ளன. எனவே, தேர்தலில் வெற்றி பெறத் திட்டமிடும் அரசியல் கட்சிகள் இந்த குடும்ப அட்டைதாரர்களை மனதில் வைத்தே தேர்தல் வாக்குறுதிகளை அறிவிப்புகளாக வெளியிடும்.
தமிழ்நாட்டில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் 5 வகையான குடும்ப அட்டைகள் பயன்பாட்டில் உள்ளன. அதன்படி, தமிழகத்தில் மொத்தம் 2 கோடியே 13 லட்சத்து 80 ஆயிரத்து 112 குடும்ப அட்டைகள் இருக்கின்றன. அவற்றில் PHH – NPHH என மொத்தம் 1 கோடியே 86 லட்சத்து 8 ஆயிரத்து 59 குடும்ப அட்டைகளும், வறியோரிலும் வறியோரான அந்தியோதயா அன்னயோஜனா திட்டத்தின்படி (AAY) 18 லட்சத்து 63 ஆயிரத்துக்கு 77 குடும்ப அட்டைகளும், 8 ஆயிரத்து 491 அன்னபூர்ணா (PDS) குடும்ப அட்டைகளும், 4 லட்சத்து ஆயிரத்து 45 முதியோர் (OAP) குடும்ப அட்டைகளும், 59 ஆயிரத்து 271 காவலர் குடும்ப அட்டைகளும் (NPHH) உள்ளன.
தமிழகத்தில் தற்போது கூட, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்குத் தமிழக அரசு சார்பில், பொங்கல் பரிசுத் தொகுப்பு நியாய விலைக் கடைகள் மூலம் விநியோகிக்கப்பட்டு வருகிறது. ‘இந்த திட்டத்தைப் பற்றிச் சிலர் தவறான விஷமத்தனமான கருத்துகளைப் பரப்பி வருவதால், இப்பணிகள் முறையாக நடைபெறுவதையும், தரமான பொருட்கள் எந்த விதமான புகார்களும் இன்றி அனைவருக்கும் கிடைக்கப் பெறுவதையும் உறுதி செய்திட வேண்டும்’ என்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். மேலும் சென்னை, ராயபுரம், தொப்பை தெரு மற்றும் புது வண்ணாரப்பேட்டை, டாக்டர் விஜயராகவலு தெரு ஆகிய இடங்களிலுள்ள நியாய விலைக் கடைகளுக்கு நேரில் சென்று, சிறப்பு பொங்கல் தொகுப்புப் பொருட்கள் பொதுமக்களுக்கு வழங்கும் பணியையும் ஆய்வு செய்தார். நியாய விலைக் கடைகளில் விநியோகிக்கப்படும் பொருள்கள் தொடர்பான குற்றச்சாட்டு முதல்வரையே ஆய்வு செய்யும் அளவுக்கு முக்கியத்துவம் பெற்றிருப்பதை உணர்ந்துகொள்ளலாம்.
இது ஒருபுறமிருக்க, பொங்கல் தொகுப்பு வழங்கியதில் ஏற்பட்டுள்ள குளறுபடிகள் மற்றும் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். பொங்கல் தொகுப்பில் பொதுமக்களுக்கு எந்தவித நன்மையும் கிடைக்கப் பெறவில்லை என சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வரும் நிலையில், நியாய விலைக் கடைக்கு முதல்வர் இப்படி நேரில் ஆய்வு செய்வது ஏன்? அதிமுகவின் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவரும் மாறி மாறி பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்து விமர்சனம் செய்வது ஏன் என்றால், இந்த மோதல் வெறுமனே பொங்கல் பரிசுத் தொகுப்புக்கானது மட்டுமல்ல. தமிழக அரசியலில் குறிப்பாக 50 ஆண்டுகளுக்கு மேலான திராவிட ஆட்சியில் முக்கியப் பங்கு வகித்து வரும் நியாய விலைக் கடைகளால்தான். அரிசி, பருப்பு, சர்க்கரை வழங்கும் இடமாக மட்டுமின்றி, தமிழகத்தின் ஆட்சியாளர்களைத் தீர்மானிக்கும் வல்லமை கொண்ட இடமாக நியாய விலைக் கடைகள் நீடித்து நிலைத்திருப்பதற்குப் பல காரணங்கள் உள்ளன.
கடந்த 1967ஆம் ஆண்டுக்கு முன்பு வரை தமிழகத்தை ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சி பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளில் கவனம் செலுத்தி வந்தது. ஆனால், அந்த சமயத்தில் அடிப்படை உணவு ஆதாரமான அரிசி கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவி வந்தது. இந்தப் பிரச்சினையை அப்போது அண்ணா தலைமையில் அதிவேகமாக வளர்நது கொண்டிருந்த திமுக தேர்தல் பிரச்சாரத்தின்போது மக்களிடம் தீவிரமாக கொண்டு சேர்த்தது. மேலும், “நாங்கள் ஆட்சிக்கு வந்தால், மூன்று படி லட்சியம், ஒரு படி நிச்சயம்” என்ற முழக்கம், திமுகவுக்கு மக்களின் பேராதரவைப் பெற்றுத் தந்தது. அந்தத் தேர்தலில், திமுக 179 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. அப்போதிலிருந்து தமிழகத்தில் ஆட்சி செய்த திமுகவும், அதிமுகவும் தங்களின் ஆட்சியில் அரிசி தட்டுப்பாடு ஏற்படாத வண்ணம் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வந்துள்ளனர்.
அண்ணாவின் மறைவுக்குப் பின்னர் தலைமைப் பதவிக்கு வந்த மறைந்த முதல்வர் கருணாநிதி, கடந்த 2006ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் நியாய விலைக் கடைகளில் ஒரு கிலோ அரிசி 2 ரூபாய்க்கு வழங்கப்படும் என அறிவித்தார். மேலும், குடும்ப அட்டை வைத்துள்ள குடும்பத்தினருக்கு வீட்டுக்கு ஒரு கலர் டிவி வழங்கப்படும் என அறிவித்தார். இந்த அறிவிப்பு அந்தத் தேர்தலின்போது தமிழகம் தவிர்த்த பிற மாநிலங்களிலும் பரபரப்பாகப் பேசப்பட்டது. இதனைத் தொடர்ந்து அதிமுகவும் இதேபோன்ற அம்சங்கள் நிறைந்த தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. ஆனால், அப்போது நடந்த தேர்தலில் திமுக கூட்டணி 163 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைத்தது.
இதனைத் தொடர்ந்து 2011ஆம் ஆண்டு நடந்த தேர்தலில், குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச ஃபேன், மிக்ஸி வழங்கப்படும், முதியோர் ஓய்வூதியத் தொகை ஆயிரம் ரூபாயிலிருந்து 1500ஆக உயர்த்தி வழங்கப்படும் என திமுக தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. பின்னர் வெளியான அதிமுக தேர்தல் அறிக்கையில், இலவச ஃபேன், மிக்ஸி, கிரைண்டர் வழங்கப்படும் என்றும், பிளஸ் 2 மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. அந்தத் தேர்தலில் 168 இடங்களில் போட்டியிட்ட அதிமுக 150 இடங்களில் வென்று ஆட்சியமைத்தது. அந்தத் தேர்தலில் 23 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற திமுக எதிர்க்கட்சி அந்தஸ்தையும் இழந்தது.
கடந்த அதிமுக ஆட்சியின்போது ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது பொங்கல் பரிசுத் தொகுப்புடன் நூறு ரூபாய் வழங்கப்பட்டது. அதே போன்று, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியில் 2020ஆம் ஆண்டு, குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாயும் , 2021ஆம் ஆண்டு 2,500 ரூபாயும் கொடுக்கப்பட்டது. அதே போல், தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்தபின், கரோனா நிவாரண நிதியாக குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.4 ஆயிரம் வழங்கப்பட்டது. ஆனால் தற்போது வழங்கப்படும் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் பணம் எதுவும் கொடுக்கப்படாதது மக்களிடம் வருத்தத்தை ஏற்படுத்தியிருப்பதாக அதிமுகவும், அதிமுக பொங்கல் பரிசுத் தொகுப்புடன் பணம் கொடுத்தது தேர்தலை மனதில் வைத்துதான் என்று திமுகவும் மாறி, மாறி குற்றம்சாட்டி வந்தாலும், தனக்கே உரிய தனித்துவ அரசியலை நிலைநாட்டிய பெருமையுடன் இயங்கி வருகின்றன நியாய விலைக் கடைகள்.
இப்படித்தான் தமிழகத்தில் நியாய விலைக் கடைகள் தமிழக அரசியல் களத்தில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், தனக்கென ஒரு தனியிடத்தைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டுள்ளது.