பொங்கல் பரிசுத் தொகுப்பில் பொருட்கள் தரமில்லை என எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

சேலம் மாவட்டம் ஓமலூர் அதிமுக புறநகர் மாவட்ட அலுவலகத்தில் நேற்று (11-ம் தேதி) நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், பங்கேற்ற அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான பழனிசாமி, கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களுக்கு வழங்கப்படும் பொங்கல் பரிசுத் தொகுப்பு தரமற்றதாக வழங்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வெளியிடும் வீடியோ வெளிவந்த வண்ணம் உள்ளது.

பரிசுத் தொகுப்பில் வழங்கும் பொருட்கள் எடை குறைவாகவும், எண்ணிக்கை குறைவாகவும், தரமில்லாமல் வழங்கப்படுகிறது. வடமாநிலத்தில் இருந்து பொருட்களை வாங்கி தரமற்ற முறையில் விநியோகிக்கப்படுகிறது. கரும்பு வழங்குவதிலும் ஊழல் நடைபெற்றுள்ளது.

இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்த பின்னரும் தரமற்றவையாகவே வழங்குகிறார்கள். பொங்கல் பண்டிகையின்போது ஏழை மக்களுக்கு ரேஷன் கடைகளில் வழங்கப்படும் வேட்டி, சேலை இந்தாண்டு வழங்கப்படவில்லை.

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது திட்டமிட்டு பொய் வழக்கு போடப்பட்டுள்ளது. திமுக அரசு ஆட்சிக்கு வந்தவுடன் காவல்துறையை தவறாக பயன்படுத்தி வருகின்றனர். முதல்வர் டீ குடிக்கவும், சைக்கிள் ஓட்டும் போதும் தனது பாதுகாப்புக்காக 500 போலீஸாரை நிறுத்தி வைத்துக் கொள்கிறார். கரோனா தொற்றுப் பரவலை சரியான வழியில் கட்டுப்படுத்த தமிழக அரசு தவறிவிட்டது.

எல்லாவற்றுக்கும் குழுக்கள் மட்டுமே அமைத்து வருகிறது. எந்த செயல்பாடும் இல்லாத திறமையற்ற அரசாக திமுக விளங்கி வருகிறது. “நாட்டுக்கே வழிகாட்டியாக செயல்படும் அரசு” என முதல்வர் கூறுகிறார். ஆனால், பொங்கல் பரிசுத் தொகுப்பு தரமற்றதாக கொடுப்பதுதான் வழிகாட்டியா என கேள்வி எழுகிறது.ஆன்லைன் சூதாட்டத்தை தடுக்க அதிமுக ஆட்சியில் சட்டம் இயற்றப்பட்டது. மீண்டும் ஆன்லைன் சூதாட்டம் வந்துவிட்டது. இதனை உடனடியாக தடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.